[X] Close

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு: 144 தடை உத்தரவு; கமாண்டோ படை உட்பட 2,000 போலீஸார் குவிப்பு


sabarimala-temple-opening-today

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 10:01 am
  • அ+ அ-

சபரிமலையில் சித்திரை திருநாள் ஆட்ட விசேஷம் பூஜைக்காக இன்று ஒருநாள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புக்கு கமாண்டோ படை உட்பட 2,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் கடந்த மாதம் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது.அப்போது, பெண்கள் பலர் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

ஐந்து நாட்களுக்குப் பிறகு நடை மூடப்பட்டது. இந்நிலையில், சித்திரை திருநாள் ஆட்ட விசேஷ பூஜைக்காக இன்று ஒருநாள் சபரிமலை நடை திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும்.இதற்கிடையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது கடமை என்று முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.

சபரிமலைக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, சபரிமலைக்கு பெண்கள் வரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் அசம்பாவிதங்கள் எதுவும் நேராமல் தடுக்க, சபரிமலையைச் சுற்றியுள்ள பம்பா, நிலக்கல், இலவங்கல், சன்னிதானம் போன்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் நாளை (6-ம் தேதி) நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் கூடுதல் டிஜிபி, 2 ஐஜி.க்கள் தலைமையில் பெண் போலீஸார் உட்பட 2,000 போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சபரிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சன்னிதானம் மற்றும் பம்பா, நிலக்கல் அடிவார முகாம்களில் 20 பேர் கொண்ட கமாண்டோ படையும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.சபரிமலைக்கு வரும் பெண்களைப் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினால், அவர்களை தடுப்பு காவலில் வைக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பக்தர்கள் பம்பா, நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி.நூக் கூறும்போது, ‘‘சபரிமலை கோயிலுக்குள் செல்ல இதுவரை பெண்களிடம் இருந்து கோரிக்கை எதுவும் வரவில்லை. கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று பெண்கள் யாராவது கோரிக்கை விடுத்தால், அவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்குவார்கள். பெண் வழக்கறிஞர்கள் 5 பேர், சபரிமலை கோயிலுக்கு செல்வதற்கு பாதுகாப்பு கேட்டு 2 வாரங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து உறுதியான தகவல் இல்லை’’ என்றார்.

இதற்கிடையில், அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று கேரள அரசு கூறிவருவதை கண்டித்து பாஜக, காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில அரசைக் கண்டித்தும், சபரிமலை ஐயப்பன் கோயில் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் வரும் 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ரதயாத்திரை நடத்த மாநில பாஜக முடிவெடுத்துள்ளது. இந்த யாத்திரைக்கு கேரள மாநில பாஜக தலைவர் பி.எஸ்.தரன்பிள்ளை தலைமை வகிக்க உள்ளார்.முன்னதாக கடந்த மாதம் 5 நாள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட போது நடந்த போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 543 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

3,701 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close