[X] Close

11-வது பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதி - முசிறி பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய முடிவு


musiri-women-admitted

11-வது பிரசவத்துக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்தியுடன் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

  • kamadenu
  • Posted: 27 Oct, 2018 10:42 am
  • அ+ அ-

திருச்சி

11-வது பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முசிறி பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் முசிறி கீழத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்(48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (45). இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து நடைபெற்ற 10 பிரசவங்களில் இரட்டை குழந்தைகள் உட்பட 11 குழந்தைகளை வீட்டிலேயே சாந்தி பெற்றெடுத்துள்ளார். இதில், 3 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துவிட்டனர். இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன் சாந்தி மீண்டும் கர்ப்பமடைந்தார். இதையறிந்த அப்பகுதியின் சுகாதார செவிலியர்கள் சாந்தியைச் சந்தித்து, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்தபோது, அவர் மறுத்துவிட்டார்.

பின்னர், மாவட்ட தாய், சேய் நல அலுவலர் உஷாரமணி, தண்டலைப்புத்தூர் மருத்துவ அலுவலர் கார்த்திக், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (முசிறி) கீதா ஆகியோர் நேற்று சாந்தியின் வீட்டுக்குச் சென்றபோது, அவர் அங்கிருந்து வெளியே சென்று ஒளிந்து கொண்டார்.

இதையடுத்து, முசிறி போலீஸார் சாந்தியை தேடிப்பிடித்து சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர், சுகாதாரத்துறையினர் அறிவுரைப்படி, மருத்துவமனையில் சேர ஒரு வழியாக சாந்தி சம்மதித்தார். இதையடுத்து, அவர் காரில் அழைத்துச் செல்லப்பட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியினர் கூறும்போது, ‘‘இதுவரை 10 பிரசவத்தில் 11 குழந்தைகளை பெற்றுள்ள போதும், ஒருமுறைகூட மருத்துவமனைக்கு செல்லவில்லை. கணவனும், மனைவியும் வீட்டிலேயே பிரசவம் பார்த்து வந்தனர். ஒருகட்டத்தில், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு சாந்தியிடம் கண்ணன் கூறினார். ஆனால் சாந்தி மறுத்துவிட்டதால் தற்போது 11-வது முறையாக கர்ப்பமடைந்துள்ளார்’’ என்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் சுப்பிரமணி கூறும்போது, ‘‘ரத்த சோகையின் காரணமாக சாந்தியின் உடல்நிலை பலவீனமாக உள்ளது. எனவே, சாந்திக்கு பிரசவம் நடைபெற்ற பின், கணவரின் ஒப்புதலுடன் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close