இந்த செப்டம்பரில் ஆசிரியர் சஞ்சய்க்கு ஒரு சல்யூட்!- படத்தைப் பார்த்துவிட்டு நீங்களும் சொல்வீர்கள்

செப்டம்பர் மாதம் என்றாலே ஆசிரியர் தினம் தான் நம்மை வரவேற்கும். ஆசிரியர்களின் மகத்துவத்தைக் கொண்டாடும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் ஆசிரியர் சஞ்சய் சென்னின் மகத்தான சேவைக்கு ஒரு சல்யூட் அடிப்போம்.
ஆசிரியர் என்றால் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பார்தானே இதில் என்ன ஸ்பெஷல் சல்யூட் என்று நீங்கள் கேட்டால் கீழே உள்ள புகைப்படத்தைப் பார்த்துவிட்டு சல்யூட் செய்யுங்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு அரசுப் பள்ளியில் இவர் பணியாற்றுகிறார். மாற்றுத்திறனாளியான இவர் தனது உடல் சவால்களை எல்லாம் தாண்டி மாணவர்களுக்கு கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களைக் கற்பிக்கிறார். வீல்சேர் ஏதுமில்லாமல் தான் அமர்ந்திருக்கும் தரைமட்டத்திலிருந்து எட்டும் உயரத்தில் பலகையில் பாடங்களை அவர் எழுதும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். முதன்முதலில் இதைப் பகிர்ந்த சஞ்சீவ் கோஷ் என்பவரும் ஒரு ஆசிரியரே என்பது குறிப்பிடத்தக்கது.
சிலர் பிரதமர் மோடி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை டேக் செய்து ஆசிரியர் சஞ்சய்க்கு எலக்ட்ரானிக் வீல் சேர் வழங்கி அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களை ஏற்றிவிடும் ஏணியாக திகழும் ஆசிரியரை ஏற்றிவிட ஒரு வீல் சேர் கோரும் நெட்டிசன்களின் கோரிக்கை நியாயமானதே. இதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.