[X] Close
 

துப்பட்டா, குங்குமத்துடன் பெண் வேடத்தில் கவுதம் காம்பீர்


gambhir-wears-saree-bindi-while-supporting-transgenders

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Sep, 2018 12:38 pm
  • அ+ அ-

தலையில் துப்பட்டா, நெற்றியில் குங்குமம் என கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படம் தலைநகர் டெல்லியில் நடந்த ஹிஜ்ரா ஹப்பா விழாவில் எடுக்கப்பட்டது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் திருவிழா நடப்பதுபோல் டெல்லியிலும் ஆண்டுதோறும் ஹிஜ்ரா ஹப்பா என்ற விழா நடத்தப்படுகிறது. மூன்றாம் பாலினத்தவர் கொண்டாடும் இந்த விழாவில் கவுதம் காம்பீர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்திய அணியில் சில மாதங்கள் முன்பு வரை ஓப்பனர் மற்றும் ஒன் டவுன் இடத்தில் ஆடி வந்தார் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர். இப்போது இவருக்கு அணியில் இடம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது.
இந்நிலையில்தான் இவரது வித்தியாசமான புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. 

மூன்றாம் பாலினத்தவர் அழைப்பை ஏற்று அவர் இந்த விழாவில் கலந்து கொண்டார். இதில் அவர் தலையில் துப்பட்டா அணிந்து நெற்றியில் குங்குமமும் வைத்து காட்சி அளித்தார். அந்த விழாவில் திருநங்கைகள், திருநம்பிகளின் வாழ்க்கை குறித்தும் அவர் பேசினார்.

கவுதம் காம்பீருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அண்மையில் ரக்‌ஷா பந்தன் நிகழ்ச்சியின்போது காம்பீர் மூன்றாம் பாலினத்தவர் கட்டிய ராக்கியை அன்போடு ஏற்றுக் கொண்டார்.

அது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்து, "நீங்கள் ஆணாக இருக்கிறீர்களா? பெண்ணாக இருக்கிறீர்களா? என்பது முக்கியமல்ல. நீங்கள் மனிதராக இருக்கிறீர்களா? என்பதே முக்கியம். நான் அப்படித்தான் இருக்கிறேன். அதனால்தான் மூன்றாம் பாலினத்தவரின் அன்பான ராக்கியை ஏற்றுக் கொண்டேன். அவர்களை நான் அவர்களாகவே ஏற்றுக்கொள்கிறேன். நீங்களும் அப்படியே செய்வீர்களா?" என ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close