[X] Close

89 வயதில் ஆராய்ச்சி மாணவராகும் ஆசை: அசர வைக்கும் சுதந்திர போராட்ட வீரர்


at-89-this-freedom-fighter-aspires-to-complete-his-phd-programme

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Sep, 2018 16:41 pm
  • அ+ அ-

கல்வி கற்க ஆவல் மட்டுமிருந்தால் போதும் எத்தனை வயதாக இருந்தாலும் கற்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஒருவர்.

ஷரணபசவராஜ் பிஸாரஹலி என்ற 89 வயது முதியவர் கன்னட சாஹித்யாவில் ஆராய்ச்சி மாணவராக சேர்வதற்காக நுழைவுத் தேர்வை எழுதியிருக்கிறார்.

1929-ம் ஆண்டில் பிறந்த இவர் தாயாரின் ஊக்குவிப்பால் கல்வி பயின்றுள்ளார். ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளார் . திருமணத்துக்குப் பின்னர் தனது 6 குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார். இவரது மூத்த மகன் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். இரண்டாவது மகன் பேராசிரியர், மூன்றாவது மகன் பிசினஸ் செய்கிறார். மேலும் ஒரு மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். மகள்கள் சுமங்கலா, அக்கம்மாதேவி ஆகிய இருவரும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர்.

இவர்களைத் தவிர தலித் சமூகத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளை படிக்க வைத்திருக்கிறார். அவர்களில் ஒருவர் காவல்துறையில், ஒருவர் பொதுப்பணித்துறையில் மற்றொருவர் தொலைதொடர்பு துறையில் பணியாற்றி வருகின்றனர்.

கல்வி கற்பதிலும் கல்வி கற்க வைப்பதிலும் ஷரணபசவராஜுக்கு அதீத ஈடுபாடு இருப்பதையே இது காட்டுகிறது.

கர்நாட்கா பல்கலைக்கழகத்தில் இருந்து கன்னட பாடத்தில் பட்டம் பெற்றார். ஆனால், பிஎச்டி பயில அவருக்குத் தேவையான கட் ஆஃப் மதிப்பெண் கிடைக்கவில்லை. அதனால், மீண்டும் அதே பாடத்தைப் பயின்று 66% பெற்றுள்ளார்.  சட்டப் படிப்பில் பட்டம், இரண்டு முதுகலைப் பட்டம் என்று வரிசையாக பட்டம் பெற்ற ஷரணபசவராஜ் தற்போது புதிய இலக்குக்கான அடியை எடுத்து வைத்திருக்கிறார்.

15 புத்தகங்களை எழுதியிருக்கும் ஷரணபசவராஜ் தனது ஆசை குறித்து கூறும்போது, "எனது வாழ்க்கைக்கான அர்த்தமே கல்வி கற்பதில்தான் இருக்கிறது என நான் நம்புகிறேன். அதனால் வயது என்னவாக இருந்தாலும் கற்றல் நிற்கக்கூடாது என விரும்புகிறேன்" என்றார்.

இன்றைக்கும்கூட அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்துகொள்ளும் ஷரணபசவராஜ் காலையில் செய்தித்தாள் வாசிப்பதை பழக்கமாகக் கொண்டிருக்கிறாராம். உணவு வேளையில் குடும்பத்தினருடன் பேசி மகிழும் அவர் மற்ற நேரங்களில் ஏதாவது வாசிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என குடும்பத்தினர் கூறுகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close