[X] Close
 

கருத்துக் கேட்டலைக் கூட தடுக்கும் அதிகாரம் எப்படி வந்தது? - யோகேந்திர யாதவ் கைதுக்கு கமல் கடும் கண்டனம்


kamal-condemns-yogendra-yadav-arrests

  • kamadenu
  • Posted: 08 Sep, 2018 19:08 pm
  • அ+ அ-

கருத்துக் கேட்டலைக் கூட தடுக்கும் அதிகாரம் எப்படி வந்தது?  என்று யோகேந்திர யாதவ் கைதுக்கு வீடியோ வடிவில் கமல் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிச் சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், அகில இந்திய அளவில், 8 வழிச் சாலை திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்தனர். 

அதன்படி, விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டத்தை திருவண்ணாமலை அடுத்த சி.நம்மியந்தல் கிராமத்தில் இன்று நடத்த முடிவு செய்திருந்தார்கள். அதில் அகில இந்திய விவசாயிகள் சங்க நிர்வாகிகளை வரவழைத்து போராட்டத்தை தீவிரப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக, ஸ்வராஜ் அபியான் அமைப்பு தலைவர் யோகேந்திர யாதவ் தலைமையில் 6 பேர், சேலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு காரில் வந்தனர். செங்கம் அடுத்த பக்கிரிபாளையத்தில் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி விவசாயிகளை சந்திப்பேன் என்று பிடிவாதமாக இருந்ததால், போலீஸார் யோகேந்திர யாதவ்வை மாலையில் கைது செய்தனர்.

அவரது கைதுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு  குரல் எழுப்பி வருகிறார்கள். யோகேந்திர யாதவ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கமல்ஹாசன் பேசியிருப்பதாவது:

வணக்கம். வெளிமாநிலத்திலிருந்து அரசியல்வாதி யோகேந்திர யாதவ் அவர்கள் நம் விவசாயிகளிடம் கருத்துக் கேட்க தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இது விமர்சனத்துக்குரியது. கடும் கண்டனத்துக்குரியது. 

கருத்துக் கேட்டலைக் கூட தடுக்கும் இந்த அதிகாரம் எப்படி இவர்களுக்கு வந்தது. சட்டத்தை ஒரு காரணமாகச் சொல்லி, குரல்களே எழாமல் செய்யும் இந்த வேலை சர்வாதிகாரம் என்றே எனக்கு தோன்றுகிறது. இல்லை இது ஜனநாயக நாடு தான் என்று ஞாபகப்படுத்த வேண்டியதாய் இருக்கிறது. இன்னொன்றையும் ஞாபகப்படுத்த கடமைப்பட்டு இருக்கிறேன். ஜனநாயகத்தின் வழியாக தான் சர்வதாரிகள் உலகெங்கிலும் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார்கள். பல முறை. அதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

மக்கள் கருத்துகளை தெளிவாக பயமின்றி எடுத்துச் சொல்லும் சூழல் வரவேண்டும். அப்படி அது வரவில்லை என்றால், வரவைக்க வேண்டும். நண்பர், சகோதரர் யோகேந்திர யாதவ்வின் கைது கண்டனத்துக்குரியது. 

இவ்வாறு கமல் தெரிவித்திருக்கிறார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close