[X] Close

பண்டைய வரலாற்றை அறிய உதவும் கோவை அருங்காட்சியகம்: விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை


coimbatore-varalaru

  • kamadenu
  • Posted: 07 Sep, 2018 16:03 pm
  • அ+ அ-

பண்டைய வரலாறு, பழமையான கலாச்சாரம் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம் குறித்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு அருங்காட்சியகத் துறை அலுவலர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் அருங்காட்சியகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. கோவையைப் பொறுத்தவரை கடந்த 1990-ம் ஆண்டு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. தற்போது கோவை நகரின் மையப் பகுதியில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்கா எதிரேயுள்ள கட்டிடத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

பழங்கால ஆயுதங்கள்

இங்கு பல்வேறு பிரிவுகளில் 600-க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய பானைகள், முதுமக்கள் தாழிகள், இரும்பு ஆயுதங்களை உருவாக்கப் பயன்படுத்திய இரும்பு உருக்கு உலையின் குழல், கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள், கல்லாக உருமாறிய விலங்கின் எலும்புகள், கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் கிடைத்த சிற்பங்கள், கல்வெட்டுகள், 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்தி, 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சப்த கன்னியர்கள் சிலை உள்ளிட்டவை நமது தொன்மையைப் பறைசாற்றுகின்றன.

கடந்த 18-ம் நூற்றாண்டில் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்த தேர், கடந்த 1992-ம் ஆண்டில் நேரிட்ட விபத்தில் தீப்பற்றி எரிந்துவிட்டது. இந்த தேரில் இருந்த சிற்பங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தின் ஆதி குடிகளான இருளர், காடர், மலசார் உள்ளிட்ட பழங்குடிகளின் வாழ்வியல் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, இந்திய நாட்டில் வெவ்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், தற்போதைய காலகட்டத்தைச் சேர்ந்த காகித பணம், பல்வேறு வகையான பதப்படுத்தப்பட்ட பூச்சிகள், கடல் வாழ் உயிரினங்கள், 10-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள், பல்லி இனங்கள், பறவைகள், அழியும் தருவாயில் உள்ள பிணம் திண்ணிக் கழுகு, சாம்பல் இருவாய் குருவி, அரிய வகை கிளி, பாலூட்டிகள், மாட்டின் எலும்புக்கூடு, அசாதாரண வளர்ச்சியடைந்த விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் ஆகியவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

புவியியல் சார்ந்த கனிமப் பொருட்கள், நவீனகால ஓவியங்கள், இசைக் கருவிகள் உள்ளிட்டவையும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரசு அருங்காட்சியகத்துக்கு பெரியவர்களுக்கு ரூ.5-ம், சிறியவர்களுக்கு ரூ.3-ம் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், பள்ளிகள் மூலம் வரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அருங்காட்சியகத்துக்கு எதிரே உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு ஆயிரக்கணக் கானோர் வந்தபோதிலும், அருங் காட்சியகத்துக்கு வருவோரின் எண்ணிக்கை சற்று குறைவு தான்.

வரலாற்றின் முக்கியத்துவம்

மனித வாழ்வின் தொன்மை, வரலாறு குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் பெரிய அளவுக்கு இல்லை என்பது வருத்தத்துக்குரியது. ஒரு நாட்டின் வரலாற்றைப் பதிவு செய்வதும், அடுத்தடுத்த தலைமுறையினர் அதைத் தெரிந்துகொள்வதும் மிகவும் அவசியமாகும். எனவே, அருங்காட்சியகத்தின் முக்கியத் துவம் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை அருங்காட்சியகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது தொடர்பாக கோவை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சி.சிவகுமார் `இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது: அரும்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வை அருங்காட்சியகத்துக்கு வரும் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறோம். பழமையான பொருட்களை பாதுகாப்பது தொடர்பாக கல்லூரி மாணவர் களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கல்லூரி பேராசிரியர்களுக்கும் பல்வேறு பயிற்சிகளை வழங்கியுள்ளோம்.

பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று, அருங்காட்சியகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அருங்காட்சியக வளாகத்தில் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம் களையும் நடத்தி வருகிறோம். கல்லூரி மாணவர்களுக்கு அருங்காட்சியகம் தொடர்பான 15 நாட்கள் கல்வியிடைப் பயிற்சி (இன்டென்சிப்) வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் பல்வேறு தலைப்புகளில் கண்காட்சிகளும் நடைபெறுகின்றன. இவ்வாறு சி.சிவக்குமார் கூறினார்.மாணவர்களைக் கவரும் அருங்காட்சியக பேருந்து

சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இருந்து `அருங்காட்சியக பேருந்து` கோவைக்கு வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்தப் பேருந்து கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியமான சென்னை அருங்காட்சியகம், 1851-ல் தொடங்கப்பட்டது. இதில் உள்ள தொல்லியல், மானுடவியல், புவியியல், விலங்கியல், தாவரவியல் தொடர்பான புகைப்படங்கள், மாதிரிகள், நாணயங்கள், ஓவியங்கள், சென்னை அருங்காட்சியகத்தின் மாதிரி போன்றவை இந்தப் பேருந்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை அருங்காட்சியகத்துக்குச் செல்ல முடியாத மாணவ, மாணவிகளுக்கு, அதில் உள்ள பொருட்கள் அனைத்தையும் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை ஏராளமான மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, வரலாறு சார்ந்த பல தகவல்களைத் தெரிந்து கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் இன்றும் இப்பேருந்து பல பள்ளிகளுக்குப் பயணிக்கிறது. நாளை (செப். 8) முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இந்தப் பேருந்து பயணிக்க உள்ளதாக அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close