[X] Close
 

மோடி எதிர்ப்பாளர் சஞ்சீவ் பட் கைதும் சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்களும்


sacked-gujarat-police-officer-sanjiv-bhatt-arrested-in-22-year-old-case-of-planting-drugs

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Sep, 2018 11:03 am
  • அ+ அ-

மோடியையும் பாஜகவையும் விமர்சித்து பதிவுகளை பகிரும் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைதுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சஞ்சீவ் பட், துடிப்பான ஐபிஎஸ் அதிகாரியான இவர் கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் அரசால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 2002-ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரம் குறித்து மோடிக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

குஜராத் கலவரம் குறித்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு மற்றும் நானாவதி கமிஷனில் குஜராத் அரசுக்கு எதிராகவே இவர் வாக்குமூலம் அளித்தார். அதன் காரணமாக அவர் பதவியும் பறிபோனது. ஆனால், அதன் பின்னரும்கூட அவரை ஏதும் தடுக்கவில்லை. சமூக வலைதளங்களில் தொடர்ந்து பாஜகவையும் மோடியையும் விமர்சித்து வந்தார். சோபியா மீது தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்ததற்குகூட கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

அண்மையில் நடிகர் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அந்த சந்திப்பு குறித்து நக்கல் ட்வீட் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

 

பிரதமர் மோடி ஒருமுறை பேசும்போது தேசப்பிதா மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி எனக் கூறுவதற்குப் பதிலாக மோகன்லால் எனக் குறிப்பிட்டார். அதனை தொடர்புபடுத்தி அண்மையில் மோகன்லால் மோடியை சந்தித்தபோது, மோடிக்கும் மோகன்லாலுக்கு இடையேயான உரையாடல் தொணியில் ஒரு ட்வீட்டைப் பதிவு செய்திருந்தார். அதில், மோகன்லாலிடம் மோடி நீங்கள் ஒரு தேசப்பிதாவாக இருந்துகொண்டு என்னைவந்து நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளீர்களே என மோடி பெருமிதம் கொள்வதுபோல் சித்தரித்து வசனத்தை பதிவு செய்திருந்தார்.

செப்டம்பர் 4-ல் இந்த ட்வீட்டை அவர் பதிவு செய்தார். இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் 22 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சஞ்சீவ் பட் கைதுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் குவிந்து வருகிறது. மோடி அரசை விமர்சிப்பவர்கள் அனைவருமே கைது செய்யப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கைது பின்னணி:

கடந்த 1996-ம் ஆண்டில் சஞ்சீவ் பட், பனாஸ்காந்தா காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தார். அப்போது 1.5 கிலோ போதைப் பொருளை வைத்திருந்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது பலான்பூரில் உள்ள ஹோட்டல் அறையில் இருந்து போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. அதை வழக்கறிஞர் சுமர் சிங் ராஜ்புரோகித் தன் வசம் வைத்திருந்ததாகக் கூறி அவரை பனாஸ்காந்தா காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆனால் ராஜ்புரோகித், ராஜஸ்தானில் உள்ள அவரின் வீட்டில் இருந்து கடத்தப்பட்டதும், போதைப் பொருள் பொட்டலத்தை பனாஸ்காந்தா காவல்துறையே வைத்ததும் பின்பு அம்பலமானது. வழக்கறிஞரை சிக்க வைத்ததாக சஞ்சீவ் பட் உள்ளிட்ட காவல்துறையினர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஜனவரியில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சஞ்சீவ் பட் மீதான விசாரணை புத்துயிர் பெற்றது. தற்போது சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுள்ளார். 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close