[X] Close
 

பண மதிப்பு நீக்கம் பாதிப்பு: ரூ.1.39 லட்சம் சேமிப்பு பணத்தை ஆற்றில் வீசிய வீட்டுப் பணியாளர்


domestic-help-throws-savings-in-demonetised-notes-into-river

மீனாட்சி - லக்‌ஷ்மிதேவி | கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 03 Sep, 2018 14:13 pm
  • அ+ அ-

41 வயது மீனாட்சி, வீட்டுப் பணியாளராக வேலை செய்து வருகிறார். கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், கவுரிகோப்லு பகுதியைச் சேர்ந்த இவரை பண மதிப்பு நீக்கம் வெகுவாக பாதித்துள்ளது. 

கேட்டல் மற்றும் பேச்சுக் குறைப்பாடு உள்ள இந்தப் பெண்மணி தனது ரூ.1.39 மதிப்புள்ள சேமிப்பை ஹேமாவதி நதியில் வீசியுள்ளார். அவர் சேமித்த பணம் மொத்தமுமே செல்லாது என கடந்த வருடம் அறிவிக்கப்பட்டவை. ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ளாதவை. ஒரு சிறிய வீடு கட்ட வேண்டும் என்ற மீனாட்சியின் கனவும் தகர்ந்துவிட்டது. 

"அரும்பாடு பட்டு சேர்த்த பணத்துக்கு மதிப்பில்லை என்று உணர்ந்ததுமே அவள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டாள். பல வாரங்கள் வருத்ததுடன் இருந்தாள். இன்னமும் இந்த ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டிருந்தால் பிரச்சினை வரும் என அக்கம்பக்கத்தினரும், நண்பர்களும் சொன்னதால், ரூபாய் நோட்டுகளை ஆற்றில் வீசிவிட்டோம்" என்கிறார் மீனாட்சியின் 70 வயது தாய் லக்‌ஷ்மிதேவி. மீனாட்சி தனது இளைய சகோதரர் தினேஷ் மற்றும் தாயாருடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். தினேஷும் கேட்டல், பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டவர். 

15 வருடங்களாக மீனாட்சி வீட்டுப் பணியாளராக வேலை செய்து வருகிறார். ஒவ்வொரு மாதமும் ரூ. 1500 சம்பளமாகவும், ரூ.1,200 ஓய்வூதியமாகவும் பெற்று வருகிறார். சேமிப்புப் பழக்கம் அவருக்கு இளம் வயதிலிருந்தே இருந்தது. பணமதிப்பு நீக்கம் அறிவிப்பு வந்தவுடன், அவரிடம் பழைய நோட்டுகள் இருக்கிறதா என உறவினர்கள் விசாரித்துள்ளனர். ஆனால் பணம் பறிபோய்விடும் என்ற பயத்தில் அவர் எதையும் சொல்லவில்லை. 

ஒருவழியாக, தான் வேலை செய்யும் ஒரு வீட்டு உரிமையாளரிடமிருந்து பணமதிப்பு நீக்கத்தின் விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொண்டார். ஆனால் அந்த நேரத்துக்கு, பழைய நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்கான காலக்கெடு, மார்ச் 31, 2017, கடந்துவிட்டது. மீனாட்சியிடம் வங்கிக் கணக்கும் கிடையாது. பழைய நோட்டுகளை மாற்ற மீனாட்சி எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து தி இந்துவில் (ஆங்கிலம்) ஏப்ரல் 19, 2017 அன்று செய்தி வெளியாகியிருந்தது. 

ஹாசன் மாவட்ட நிர்வாகத்தில் மூத்த அதிகாரிகளை மீனாட்சியும் அவரது தாயும் சந்தித்துள்ளனர். அந்தப் பகுதியில் பல வங்கிகளையும் அணுகியுள்ளனர். முன்னாள் பிரதமர் தேவ கௌடாவையும் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால அவர்களின் எந்த முயற்சியும் பலன் தரவில்லை. "பெங்களூருவுக்கும் சென்று அதிகாரி ஒருவை சந்தித்தேன். கடைசியாக பழைய நோட்டுகளை வைத்திருந்தால் போலீஸ் பிடிக்குமோ என்ற அச்சத்தில் அவற்றை நதிய்ல் வீசிவிட்டோம்" என்கிறார் லக்‌ஷ்மிதேவி. 

- சதிஷ் ஜிடி, தி இந்து (ஆங்கிலம்)



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close