[X] Close
 

சிகிச்சைக்காக கேரள முதல்வர் அமெரிக்கா பயணம்: பாஜகவினர் கடும் சாடல்


bjp-criticizes-kerala-cm-pinarayi-vijayan-regarding-his-usa-trip

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 03 Sep, 2018 12:25 pm
  • அ+ அ-

சிகிச்சைக்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் அமெரிக்கா சென்றிருப்பதை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த மார்ச் 3-ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முழு உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, மேல் சிகிச்சைக்காக கடந்த மாதம் அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது அமெரிக்க பயணத்தை ஒத்தி வைத்தார். இந்நிலையில் பினராயி விஜயன் நேற்று (செப்டம்பர் 2) அமெரிக்காவுக்குச் சென்றார்.  அங்கு மின்னசோட்டா மாகாணத்தில் அமைந்துள்ள மாயோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெறுவார் என கேரள அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



இதனை பாஜக கடுமையாக விமர்சித்து இருக்கிறது. இது தொடர்பாக கர்நாடக பாஜகவினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, யோகி ஆதித்யநாத்தை கேரளாவுக்கு வந்து, கேரள மருத்துவமனைகள் எப்படி நடத்தப்படுகிறது என்பதைப் பார்த்து அறிந்துகொள்ள அழைத்தது. இன்று கேரள முதல்வர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா ஓடுகிறார். கம்யூனிஸ்ட்கள் நடத்தும் மருத்துவமனைகளின் தரத்தை இது தெளிவாகக் காட்டுகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

கர்நாடகா பாஜகவினரின் ட்வீட்டைக் குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் “கம்யூனிஸ்ட்களின் போலித்தனம் தெரிந்துவிட்டது. அவர்கள் மாநிலம் வெள்ள பாதிப்புக்குப் பிறகு எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது மாநில முதல்வரோ மருத்துவ பரிசோதனைக்கு அமெரிக்கா செல்வதா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close