[X] Close
 

முகமறியா குழந்தைக்கு ஒரு நோட்புக்!- இதுவும் நிவாரணம்தான்; நெகிழச் செய்யும் ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகள்


to-an-unknown-child-a-notebook-of-compassion

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Sep, 2018 13:48 pm
  • அ+ அ-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் பள்ளி பாடப்புத்தகங்களை இழந்த மாணவ மாணவிகளுக்காக வித்தியாசமாக அன்புக்கரம் நீட்டியுள்ளனர் ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகள்.

கேரளாவில் நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் 14 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில் மாநிலத்துக்கு உதவிகள் நீண்டு கொண்டிருக்கின்றன. உணவு, உடை, மருந்துப் பொருட்கள் என பல்வேறு நிவாரணப் பொருட்களும் கேரளாவுக்கு சென்று கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் மலப்புரம் மாவட்டம் கிழிசேரியில் உள்ள அல் அன்சார் ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகள் தன்னைப் போன்ற சக பள்ளி மாணவிகளுக்காக ஒரு சகாயம் செய்திருக்கின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன்னைப் போன்ற பள்ளிக்குழந்தைகளுக்கு எப்படி உதவ முடியும் என்று குழந்தைகள் கூடி ஆலோசித்துள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு வெள்ளத்தால் நோட்டு புத்தகங்களை இழந்துவிட்டு மீண்டும் பள்ளிக்குச் செல்வது எவ்வளவு சிரமம் என்பது புரிந்தது.

இந்த யோசனை கோழிக்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இன்குபேஷன் (Incubation) என்ற கல்வி சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் வாட்ஸ் அப்பில் ஒரு குழுவைத் தொடங்கி, பள்ளிப் பாடங்களை எழுதிய நோட்டுபுக்குகள் தேவை என்ற செய்தியை விளம்பரப்படுத்தினர்.

பொதுமக்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், முதலில் அன்புக்கரம் நீட்டியவர்கள் யோசனையை தந்த அல் அன்சார் இல்ல குழந்தைகள். அவர்கள் அனைவரும் 500 நோட்டுகளில் மலையாளம், தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடங்களை தங்கள் கைப்பட நோட்டுகளில் எழுதினர்.
இது குறித்து இன்குபேஷன் (Incubation) அமைப்பின் நபீல் அகமது கூறும்போது, "ஒரு நோட்டில் எழுதி அதை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளலாம் என யோசனை கூறுகின்றனர். ஆனால், இப்படி கையால் எழுதி அனுப்பும்போது அதைப் பெறும் குழந்தையின் மனதில் உருவாகும் ஆனந்தம்தான் எங்களுக்கு முக்கியம். இதை ஜெராக்ஸ் மூலம் பெறமுடியாது. இதுதான் உண்மையான நிவாரணமாக இருக்க முடியும். முகமறியா குழந்தைகளுக்கு முகமறியா மனிதர்கள் செலுத்தும் அன்பும் மனிதமும் இதுதான்" என்றார்.

10000 நோட்டுகள்..
ஆகஸ்ட் 30-ம் தேதி அன்று 10,000 நோட்டுகளை ஆழப்புழா மற்றும் வயநாடு மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஓப்படைத்துள்ளனர். இன்னும் நிறைய பேர் தங்களை நோட்டுகளை எழுதும் பணியில் ஈடுபடுத்தி வருவதால் இன்னும் அதிகமான குழந்தைகள் பயனடைவர் என நபீல் அகமது நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1000 கோடி திரண்டது எப்படி மிகப்பெரிய செய்தியோ அப்படித்தான் சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளுக்காக 10000 பாட நோட்டுகள் சேர்ந்துள்ளதும்.
இதுவும் நிவாரணம் தான்.

[X] Close