[X] Close

மோடி அரசுக்கு எதிராக மக்கள் திரள வேண்டும்: ப.சிதம்பரம் கடும் சாடல்


pchidambaram-tweets-about-demonetisation

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 31 Aug, 2018 16:15 pm
  • அ+ அ-

பணமதிப்பு நீக்கம் என்பது ஒரு மோசடி நடவடிக்கை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

ஊழல், தீவிரவாதம், கள்ளநோட்டு, கறுப்புப்பணம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி புழக்கத்தில் இருந்த ரூ.15.41 கோடி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அந்த ரூபாய் நோட்டுகளில் ரூ.3 லட்சம் கோடி கறுப்புப்பணம் வரை வங்கி முறைக்குள் வராது என்று மத்திய அரசு நம்பி இருந்தது.

ஆனால், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய்களில் 14.41 லட்சம் கோடியில், 14.31 லட்சம் கோடி வங்கிக்குள் வந்துவிட்டன. ரூ.10,700 கோடி மட்டுமே வரவில்லை என்று தெரிவித்தது. இதன் மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டி வருகின்றன.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு குறித்து, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அப்பாடா! 21 மாதங்கள் கழித்து ஒரு வழியாக ரிசர்வ் வங்கி செல்லாத ரூபாய் தாள்களை எண்ணி முடித்துவிட்டது. அவர்களைப் பாராட்டுவதா அல்லது நம் தலையில் அடித்துக்கொள்வதா?. ரூ 15,42,000 கோடி மதிப்பு தாள்களில் ரூ 15,31,000 கோடி தாள்கள் திரும்பி வந்துவிட்டன! கறுப்புப் பணமெல்லாம் வெள்ளையாகிவிட்டது!

பண முதலைகளின் கறுப்புப் பணத்தை எளிதாக மாற்றி வெள்ளைப் பணமாக்குவதற்கு மோடி அரசு கண்டு பிடித்த வழிதான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை. பணமதிப்பு நீக்கம் என்பது ஒரு மோசடி நடவடிக்கை. அதற்கு இந்திய மக்கள் பட்ட துன்பமும் கொடுத்த விலையும் மிக அதிகம். 

100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 15 கோடி அன்றாடம் வேலை செய்து பிழைப்போர் (அவர்களை நம்பி 45 கோடி மக்கள்) பல வாரங்கள் வருமானம் இழந்தனர், கடன் பட்டனர். பல இலட்சம் சிறு, குறு தொழில்கள் (தமிழ்நாட்டில் மட்டும் 50,000) மூடப்பட்டன. ஒன்றரைக் கோடி பேர் (தமிழ்நாட்டில் மட்டும் 5,00,000) வேலையிழந்தனர்

அரசு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, மக்கள் மீது துன்பத்தைச் சுமத்தக்கூடாது. பணமதிப்பு நீக்கத்தின் காரணமாக இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட இழப்பு ரூ 2,25,000 கோடி. இந்த ஒரு நடவடிக்கைக்காக மட்டுமே திரு நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் திரள வேண்டும்

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close