[X] Close

முற்றிலும் தோல்வியடைந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை: அரசியலில் இருந்து பிரதமர் மோடி விலக வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் கவுடா வலியுறுத்தல்


modi-should-leave-politics-says-congress-mp

கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எம்.வி.ராஜீவ் கவுடா எம்.பி. அருகில், மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் | படம்: ஜெ.மனோகரன்

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 31 Aug, 2018 09:56 am
  • அ+ அ-

பண மதிப்பு நீக்கம் முற்றிலும் தோல்வியடைந்த நடவடிக்கை என நிரூபணமாகியுள்ளதால், பிரதமர் மோடி அரசியலில் இருந்து விலக வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் ஆய்வுப் பிரிவு தலைவரும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினருமான எம்.வி.ராஜீவ் கவுடா எம்.பி. கூறினார்.

கோவைக்கு நேற்று வந்த அவர், மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயக்குமார், புறநகர் மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், நிர்வாகிகள் சரவணகுமார், கணபதி சிவக்குமார், சௌந்தரகுமார், பச்சைமுத்து மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்பு நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியின்போது, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்திய விமானப் படைக்குத் தேவையான 126 போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 2012-ம் ஆண்டில் சர்வதேச அளவிலான ஏலம் நடத்தப்பட்டது. இதில் ஒரு விமானம் ரூ.526 கோடி என்ற மதிப்பில் 18 விமானங்களை பெற்று, அவற்றை உடனடியாக பயன்படுத்தும் வகையிலும், மீதமுள்ள 108 விமானங்களுக்கான தொழில்நுட்பத்தைப் பெற்று, பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் மூலம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. எனினும், அதற்குள் ஆட்சி மாறியது. பாஜக தலைமையில் மத்திய அரசு பதவிக்கு வந்தது.

கடந்த 2015-ல் பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு அரசாங்க முறை பயணமாக சென்றபோது, ரகசியமாக ரஃபேல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்பது குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. ஆனால், ரஃபேல் ஒப்பந்தம் ரகசியமானது என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக, பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பம் ரகசியம் காக்கப்படும். ஆனால், மக்களின் வரிப் பணத்தில் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வளவு என்பதில் ரகசியம் காப்பது எதற்காக? முறைகேடுகளை மறைக்கவே இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேநேரத்தில், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பிரான்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய அரசுக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கு 36 விமானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும்.

தொழில்நுட்பத்தைப் பெற்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் தயாரிப்பதற்குப் பதிலாக, பாதுகாப்புத் துறையில் அனுபவமில்லாத ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரஃபேல் விமானம் வாங்குவது தொடர்பாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகள் தாமதம் செய்யப்பட்டதாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டாகும். ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான முறைகேடுகளை மறைக்க, காங்கிரஸ் கட்சி மீது பழி சுமத்தி பாஜக அரசு நாடகமாடுகிறது.

கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாதிகளுக்குச் செல்லும் நிதியை தடுப்பதற்காகவும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கொண்டுவந்ததாக பாஜக அரசு தெரிவித்தது. ஆனால், 99.3 சதவீத பணம் வங்கிக்குத் திரும்பியுள்ளது. கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் பின்வாசல் வழியாக கருப்புப் பணத்தை மாற்றிவிட்டனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களும், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது தவிர, வேறந்த பயனும் ஏற்படவில்லை. எனவே, இந்த நடவடிக்கைக்கு முழுப் பொறுப்பேற்று, அரசியலில் இருந்து பிரதமர் மோடி விலக வேண்டும்.

கேரள மாநிலத்தில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு செயல்படும். தற்போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அனைத்து மாநில விவசாயிகளும் பயனடைவர். இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close