[X] Close
 

குழந்தைக்கு புதிதாக உருவான கட்டை விரல்: அரிய பிரச்சினைக்கு புதிய சிகிச்சை


doctors-give-the-gift-of-grip-to-kid-with-rare-condition

கட்டை விரலாக மாறிய ஆட்காட்டி விரல்...

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 27 Aug, 2018 17:17 pm
  • அ+ அ-

புதிதாகப் பிறந்த தன் குழந்தை ஆயுஷியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கையைப் பார்த்ததுமே ராஷிமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மனம் உடைந்து போனார். 

ஆயுஷியின் வலது கையில் கட்டை விரல் முழுதாக வளர்ச்சியின்றி இருந்தது. அப்படியென்றால் பென்சில் பிடிப்பது, பட்டன் போடுவது என அடிப்படை செயல்களைக் கூட அவள் விரல்களால் செய்வது கடினம். ரேடியல் க்ளப் ஹாண்ட் வித் ஹைபோ ப்ளாஸ்டிக் தம்ப் என்கிற பிரச்சினையால் ஆயுஷி பாதிக்கப்பட்டிருந்தார். இது லட்சத்தில் ஒரு குழந்தைக்கு மட்டுமே வரும் அரிய பிரச்சினை. 

ஆயுஷியின் எதிர்காலம் குறித்து அவள் பெற்றோர் கவலை கொண்டனர். அடுத்த சில மாதங்களில், கட்டை விரலை பயன்படுத்த முடியாது என்பதால் ஆயுஷி தனது ஆள்காட்டி, நடுவிரல்களால் பொருட்களை எடுக்க முயற்சி செய்ய ஆரம்பித்தார். மற்ற குழந்தைகள் எளிதாக செய்யும் வேலைகளைச் செய்யவும் ஆயுஷி கஷ்டப்பட்டார். 

கட்டை விரலின்றி மனிதர்களால் வாழ முடியுமென்றாலும் தினசரி வேலைகளைச் செய்ய அவர்கள் கஷ்டப்படுவார்கள். மற்றவர்களிடமிருந்தும் தேவையில்லாத கேலி கிண்டல் வந்து சேரும். 

பி.எஸ்.ஆர்.ஐ எலும்பியல் மருத்துவமனையின் தலைவர் பி.பி.கோட்வால், ஆயுஷியின் பெற்றோருக்கு நம்பிக்கை தந்தார். ஆயுஷி கஷ்டப்படுவது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஆயுஷியின் ஆட்காட்டி விரலைக் கொண்டு, கட்டை விரலை மீண்டும்  கட்டமைக்க முடிவெடுத்தார். இந்த சிகிச்சை முறைக்கு pollicisation (பாலிசிசேஷன்) என்று பெயர். இந்த 4 மணி நேர அறுவை சிகிச்சையில் ஆயுஷியின் ஆட்காட்டி விரல் சுழற்றப்பட்டு, அளவு குறைக்கப்பட்டு, கட்டை விரல் இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டது. பின் அந்த விரலுக்கான ரத்த நாளங்களும், நரம்புகளும் மீண்டும் இணைக்கப்பட்டன. 

இப்படி மீண்டும் உருவாக்கப்பட்ட கட்டை விரல் சரியாக வளர வேண்டும், ஆயுஷிக்கு என்றும் குழந்தையின் கட்டை விரல் அளவே இருக்கக் கூடாது என்பதில் மருத்துவர்கள் கவனம் எடுத்துக் கொண்டனர். ஆட்காட்டி விரலிலிருந்து உருவான இந்த புதிய விரல் கட்டை விரல் போலவே செயல்படுகிறது. 

"இது மிகவும் சவாலான அறுவை சிகிச்சை. நான் செய்வதில் மிக சிக்கலானதும் கூட. ஏனென்றால் குழந்தையின் கை மிகவும் சிறியது. எனவே ரத்த நாளங்கள், நரம்புகள் போன்றவையெல்லாம் இன்னும் சிறியதாக இருக்கும். நோயாளிக்கு ஒரு வயதிலிருந்து ஒன்றரை வயதுக்குள் இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும். அந்த வயதில் புதிதாகக் கட்டமைக்கப்பட்ட விரலோடு மூளையில் செயல்பாடு ஒத்துப்போவது எளிது. இதுவே வயது முதிர்ந்த ஒருவருக்கு இந்த சிகிச்சை செய்தால், அவரால் இந்த புதிய கட்டை விரலை பயன்படுத்துவது கடினமாக இருக்கும். ஏனென்றால் முதிர்ந்த மூளைக்கு அதே அளவு ஒத்துப்போகும் திறன் இருக்காது" என கோட்வால் கூறியுள்ளார்.

சிகிச்சைக்குப் பிறகு ஆயுஷிக்கு ஒரு கட்டை விரலோடு மேலும் மூன்று விரல்கள் உள்ளன. பெரும்பாலும், ஆட்காட்டி விரல் இல்லை என்பதை பலர் கவனிப்பதில்லை. கையின் ஒவ்வொரு அசைவுக்கும் கட்டை விரல்தான் முக்கியம். இந்த சிகிச்சையின் நோக்கமே பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நன்றாக வேலை செய்யும் கையைத் தருவதுதான். 

[X] Close