[X] Close
 

துன்பத்திலும் இன்பம்: கேரளாவில் ஒரே இரவில் திருமண மண்டபமாக மாறிய நிவாரண முகாம்; களைகட்டியது மணவிழா 


marriage-at-kerala-flood-relief-camp

  • kamadenu
  • Posted: 24 Aug, 2018 16:38 pm
  • அ+ அ-

கொச்சி, யு.ஹிரன், ஜி.கிருஷ்ணகுமார் 

கேரளாவில் பெய்த பெருமழை, வெள்ள பாதிப்பில் இருந்து இன்னும் அந்த மாநில மக்கள் மீளாநிலையில், அவ்வப்போது இனிமையான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. 

புரவூரில் உள்ள நிவாரண முகாம் ஒரு திருமணத்துக்காக சிறிது நேரத்தில் திருமண மண்டபமாக மாற்றப்பட்டு நேற்று எளிமையான முறையில் ஒரு ஜோடிக்குத் திருமணம் முடிந்தது. 

வடக்கு பரவூர் எழுகரா அருகே கடக்காரா பகுதியைச் சேர்ந்தவர்கள் சுபேஷ். இவர் மஸ்கட்டில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிபினா என்ற பெண்ணும் நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்காகத் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டன. ஆனால், கடந்த 10 நாட்களால் மாநிலத்தில் பெய்த மழையில் அனைவரின் வாழ்க்கையும் புரட்டிப்போடப்பட்டது. 

மணமகள், மணமகன் இருவரின் வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டதால், நிவாரண முகாம்களில் இரு குடும்பத்தாரும் தங்கி இருந்தனர். இந்நிலையில், திருமணம் நிச்சயக்கப்பட்ட நாள் நெருங்கி, நேற்றுமுன்தினம் என்ன செய்வதென்று அனைவரும் யோசித்தனர். 

இது குறித்து நிவாரண முகாம்களில் தங்கி இருந்த 750-க்கும் மேற்பட்ட மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதைக் கூறியதுமே அனைத்து மக்களும் நிவாரண முகாமைத் திருமண மண்டபமாக மாற்றி, திருமணத்துக்கான அந்த மகிழ்ச்சியான, பரபரப்பான தருணத்தை உண்டாக்கிவிட்டனர். 

மணமகனும், மணமகளும் பல்வேறு கற்பனைகளோடு திருமணத்தை எதிர்பார்த்த நிலையில், எந்தவிதமான ஆடம்பரமும் இன்றி, மிகவும் எளிமையான முறையில் நேற்று காலை நிவாரண முகாமில் சுபேஷ், சிபினா திருமணம் நடந்து முடிந்தது. 
உண்மையில் திருமணத்துக்கு கொடுத்த அழைப்பிதழில்கூட இந்த அளவுக்கு உறவினர்களும், நண்பர்களும் வந்திருக்கமாட்டார்கள். ஆனால், நிவாரண முகாம்களில் 750-க்கும் மேற்பட்டோர் சுற்றி இருந்து மணமக்களை வாழ்த்தினார்கள். 

இந்தத் தருணம் குறித்து மணமக்கள் கூறுகையில், எங்களுடைய திருமண வாழ்க்கையில் திருமணத்தையும் மறக்க முடியாது, இந்த மகிழ்ச்சியான தருணத்தையும் மறக்க முடியாது. இந்த திருமணத்தை நடத்திய பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்ல முடியாது, நிவாரண முகாம்களில் இருக்கும் அனைவரும்தான் இந்தத் திருமணம் நடக்கக் காரணம், அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். 
திருமணம் முடிந்தபின், மிகவும் எளிமையான முறையில்அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. 

இது குறித்து மணமகள் சுபினாவின் சகோதரர் சுபின் கூறுகையில், திருமணத்தை நடத்தலாமா அல்லது ரத்துசெய்யலாமா என யோசித்தோம். ஆனால், நிவாரண முகாம்களில் இருப்பவர்களிடம் திருமண விஷயத்தைக் கூறியவுடன், ஏராளமானோர் ஒரே இரவில் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினார்கள். வெள்ளத்துக்கு முன்பாக குடோனாக இருந்த இந்த இடம் இப்போது நிவாரண முகாமாகவும், ஒரே இரவில் இது திருமண மண்டபமாகவும் மாறியது. 
அனைத்து வலிகளையும் தாங்கிக்கொண்டு, நிவாரண முகாம்களில்இருக்கும் மக்கள் எங்கள் வீட்டு திருமணத்துக்காக புன்னகையுடன் உழைத்ததை, வேலை செய்ததை மறக்க முடியாது என்று கண்ணீருடன் தெரிவித்தார். 

திருமணத்துக்குப் பின் மணமக்கள் இருவரும் கருமலூர் அருகே இருக்கும் அவர்களின் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close