[X] Close

மகனின் திருமணத்தை எளிமையாக்கி பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்கும் பாடகர்


singer-unni-menon-to-hold-simple-wedding-for-son

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Aug, 2018 13:39 pm
  • அ+ அ-

மகனின் திருமணத்தை எளிமையாக நடத்தி மீதமாகும் பணத்தை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்குக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார் பாடகர் உன்னி மேனன்.

கேரள மாநிலம் நூறாண்டில் கண்டிராத வெள்ளம் 300-க்கும் மேற்பட்ட உயிர்களை அடித்துச் சென்றது. இந்நிலையில் மாநிலத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவிகள் பெருகி வருகின்றன.

வெளி மாநில மக்களும் வெளிநாட்டவரும்கூட ஆர்வமாக உதவிவர உள்ளூர் பிரபலங்களும் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மகனின் திருமணத்தை எளிமையாக நடத்தி மீதமாகும் பணத்தை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்குக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார் பாடகர் உன்னி மேனன். மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் இவர் சிறந்த பாடகர். உயிரே படத்தில் இவர் பாடிய பூங்காற்றிலே என் சுவாசத்தை.. பாடல் மெகா ஹிட். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என பல இசையமைப்பாளர்களுக்கும் இவர் பாடியுள்ளார்.
இவரது மகன் அன்கூர் உன்னிக்கும் காவ்யாவுக்கும் வரும் செப்டம்பர் 20-ல் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திரிச்சூரின் லூலூ திருமண மண்டபத்தில் திருமணம் நடப்பதாக இருந்த நிலையில் தற்போது திருமண நிகழ்வு இடம் மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து உன்னி மேனன், "கடந்த 9 மாதங்களாகவே திருமண முன்னேற்பாடுகளை கவனித்து வருகிறோம். திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், இப்போது மாநிலமே துயரத்தில் இருக்கும்போது நாங்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. 2500 பேரை அழைப்பதாக இருந்த இடத்தில் வெறும் 200 பேரை மட்டுமே அழைக்கிறோம். திரிச்சூர் லூலூ மகாலுக்குப் பதிலாக சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் திருமணம் செய்கிறோம். மீதமாகும் பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்குக் கொடுக்கவுள்ளோம். திருமண முகூர்த்தம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டதால் தேதியை மட்டும் மாற்றுவதாக இல்லை" எனக் கூறியுள்ளார்.

அண்மையில் கொச்சி நகர மேயர் சவுமினி ஜெயின் தனது மகளின் திருமணத்துக்காக சேமித்த தொகையை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக வழங்குவதாகக் கூறினார்.

அந்த வரிசையில் தற்போது உன்னி மேனனும் மகன் திருமணச் செலவை சுருக்கி மீதத் தொகையை நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close