[X] Close

பிரபாகரன் மரணம் என்னையும் பிரியங்காவையும் வேதனைப்படுத்தியது: ராகுல்


priyanka-and-i-weren-t-happy-about-ltte-chiefs-death

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Aug, 2018 12:11 pm
  • அ+ அ-

விடுதலைப் புலிகள் தலைவராக இருந்த பிரபாகரனின் மரணம் தன்னையும் தனது சகோதரி பிரியங்காவையும் வேதனைப்படுத்தியதாக ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ஜெர்மனியில் புக்கேரியஸ் சம்மர் ஸ்கூலில் உரையாற்றிய ராகுல் காந்தி இவ்வாறு பேசினார். நான் வன்முறையால் பாதிக்கப்பட்டவன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராகுல் பேசியதாவது:

2009-ல் விடுதலைப் புலிகள் தலைவராக இருந்த பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வெளியானது. உடனே நான் எனது சகோதரி பிரியங்காவுக்கு ஃபோன் செய்தேன். எனக்கு துளியும் மகிழ்ச்சியில்லையே ஏன்? எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது! நியாயமாக எனது தந்தையைக் கொன்றவர் இறந்துவிட்டார் என்பதை நான் கொண்டாடத்தானே செய்யவேண்டும்?! என்றேன். எனது சகோதரியும் அதையே கூறினார். எனக்கும் எந்த மகிழ்ச்சியும் இல்லை என்றார். 
நான் ஏன் மகிழ்ச்சியடையவில்லை என்பதை பின்னர் உணர்ந்தேன். பிரபாகரனின் குழந்தைகளில் நான் என்னைப் பார்த்தேன். நான் அழுததைப்போலவே பிரபாகரனுக்காக அவரது குழந்தைகள் அழுதிருப்பார்கள் என்பதை உணர்ந்தேன்.
பிரபாகரன் மோசமானவராக இருந்திருக்கலாம். ஆனால், அவருக்கு எதிரான வன்முறை அவரை மட்டுமல்லாமல் அவரது குழந்தைகளையும் பாதித்தது. நானும் அப்படி வன்முறையால் பாதிக்கப்பட்டவன்.
இன்னும் ஆழமாக அலசினால், அந்த வன்முறையை எது தூண்டியது என்பதை அறியலாம். 
வன்முறையை வெல்ல அஹிம்சையே சரியான வழி. வேறு எந்த வழியும் இல்லை. நீங்கள் வன்முறையை வன்முறையால் வெல்லலாம் என நினைக்கலாம் ஆனால் அது உங்களிடமே திரும்பும். வன்முறையைக் கடந்து செல்ல ஒரேவழி மன்னிப்பு. மன்னிப்பதற்கு முன்னால் ஒரு சம்பவம் ஏன் நடந்தது எதற்காக நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளவும் வேண்டும்.

இவ்வாறு ராகுல் பேசியுள்ளார்.

1984-ல் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி (ராகுலின் பாட்டி) அவரது மெய்க்காப்பாளர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். 1991-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ( ராகுலின் தந்தை) மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close