[X] Close
 

கமென்ட் அடிக்கும் வேளையில் களத்துக்கு செல்லலாமே!- துல்கர் தாக்கு


dulquer-salmaan-slams-trolls-for-spreading-negativity

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Aug, 2018 12:17 pm
  • அ+ அ-

கமென்ட் அடிக்கும் வேளையில் களத்துக்கு செல்லலாமே என தன்னை விமர்சித்த நெட்டிசனுக்கு காட்டமாக பதில் சொல்லியிருக்கிறார் துல்கர் சல்மான். 

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 360-ஐ கடந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் மம்மூட்டியின் மகனும் மோலிவுட் இளம் நடிகருமான துல்கர் சல்மான் தனது பங்காக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் அளித்தார்.

ஆனால், வெளிநாட்டில் இருப்பதால் தன்னால் நேரடியாக களத்தில் இறங்கி உதவ முடியவில்லை எனக் கூறி வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதில், "இக்கட்டான இந்த நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக நான் கேரளாவில் இல்லை என்பது என்னைக் கொல்கிறது. நான் தொலை தூரத்தில் இருக்கிறேன். இருந்தாலும் நான் என்ன மாதிரியான செய்திகளை ஷேர் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களோ எதை பரவலாக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை தெரிவியுங்கள்" எனக் கூறியிருந்தார்.

ஒரு பிரபலம் என்ற முறையில் தன்னால் ஒரு செய்தியை நிறைய பேரிடம் தெரிவிக்கலாம் என்பதால் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரது இந்த பதிவை கிண்டல் செய்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். உங்களை யார் இங்கு வர வேண்டாம் எனச் சொன்னது? என்ற தொணியில் விமர்சித்து வருகின்றனர்.
இதை எளிதாக எடுத்துக் கொள்ளாத துல்கர் சல்மான் தகுந்த பதிலடியும் கொடுத்திருக்கிறார்.

துல்கர் கூறியிருப்பதாவது:
நான் கேரளாவில் இல்லை என்பதால் நான் எந்த உதவியும் செய்யவில்லை என்று அர்த்தமில்லை. உங்களிடம் லைக் பெற வேண்டும் என்பதற்காக நான் எதுவும் செய்யத் தேவையில்லை. 

இதுபோன்ற தருணங்களிலாவது ஒன்றிணைந்து உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும். உங்களது எதிர்மறை எண்ணங்களை விலக்கி வையுங்கள். வெறுப்பையும் முன்முடிவுகளையும் நிறுத்துங்கள். 
இப்படி விமர்சிப்பவர்கள் நிச்சயம் நிவாரண முகாம் பக்கம் சென்றிருக்க வாய்ப்பில்லை. கமென்ட் அடிக்கும் வேளையில் களத்துக்கு செல்லலாமே!

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close