[X] Close
 

முதுகையே பலகையாக்கி உயிர்காத்த ஆபத்பாந்தவன்: கேரளாவின் மழை முகம்


jaisal-the-saviour

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Aug, 2018 17:01 pm
  • அ+ அ-

கடவுளின் சொந்த தேசமான கேரளா இயற்கையின் கோரத் தாண்டவத்தில் சிக்கி கடுமையான சேதங்களை சந்தித்திருக்கிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 10 நாட்களாக மழை பெய்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். 

இந்நிலையில், மீட்புப் பணிக்காக முப்படையினரும், பேரிடர் மீட்புப் பணியிரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களோடு இணைந்து களத்தில் மீனவர்களும் சேவை செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்தான், ட்ரமா கேர் ஏஜென்சி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெய்சால் (32) தனது மீட்புப் பணியால் பலரையும் நெகிழச் செய்திருக்கிறார். கேரளாவின் 4 மாவட்டங்களில் இயங்குகிறது இந்த ட்ராமா கேர் ஏஜென்சி. இதன் உறுப்பினரான ஜெய்சால் மலப்புரம் மாவட்டத்தில் மீட்புப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரது சொந்த ஊர் சப்பாடி கடற்கரை அருகே உள்ள தானூர். மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக மலப்புரம் மாவட்டம் வேங்கரா பகுதியில் சுவாகதமாடு பகுதிக்கு ஜெய்சால் சென்றார்.

சுவாகதமாடு பகுதியில் ஜெய்சால் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது அவரை அப்பகுதிவாசி ஒருவர் படம்பிடித்து வாட்ஸ் அப்பில் பகிர ஜெய்சால் தற்போது இணையத்தில் உயர்ந்து நிற்கிறார்,
அந்த வீடியோவில் படகின் அருகே ஜெய்சால் ஒரு பாலம் போல் குணிந்து நிற்க அவர் முதுகில் ஏறி மக்கள் படகில் இறங்குவதைக் காண முடிகிறது. அப்போது அருகில் இருக்கும் யாரோ ஒருவர் செருப்பை அகற்றிவிட்டு ஏறவும் அவரும் மனிதரே என அதற்ற, ஜெய்சாலோ, "விட்டுவிடுங்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதுகாப்புத் தேடி செல்பவர்களை இப்படி அதற்றுவது ஆகாது. அவர்கள் செருப்புடன் ஏறினாலும் தவறில்லை" எனக் கூறுவதை கேட்க முடிகிறது.

தன் உடலை வருத்தி உயிர்களைக் காப்பாற்றிய ஜெய்சாலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
29 நாள் பச்சிளங் குழந்தையைக் காப்பாற்றினர்.

வெங்காராவுக்கு மீட்புப் பணிகளுக்காக ட்ராமா கேர் அமைப்பைச் சேர்ந்த ஜெய்சால் உட்பட 10 பேர் சென்றனர். மொத்தம் 17 குடும்பங்களை இவர்கள் மீட்டுள்ளனர். பிறந்த 29 நாட்களே ஆன பச்சிளங் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டது. குழுவில் இருவருக்கு தேள் கடித்தது. ஆனாலும், குழுவினர் சற்றும் தயங்காமல் மீட்புப் பணியைத் தொடர்ந்துள்ளனர். கர்ப்பிணிப் பெண்களை மீட்பதே மிகப் பெரிய சவாலாக இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரால் செல்ல முடியாத இடத்துக்குக்கூட தாங்கள் நீந்திச் சென்றதாகக் கூறுகிறார் ஜெய்சால். தேள் போன்ற கொடிய பூச்சிகள் கடித்தபோதும் கடிபட்ட இடத்தில் பகுதி மக்கள் தந்த மஞ்சளைத் தேய்த்துவிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும் கூறும் ஜெய்சால் கராத்தே, டேக்வாண்டோ போன்ற தற்காப்புக் கலைகளை நன்கு அறிந்திருக்கிறார்.

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு மழை முகமாக திகழ்பவர்களில் ஜெய்சாலும் ஒருவராக உயர்ந்து நிற்கிறார்.

[X] Close