[X] Close

அடித்துச் செல்லப்பட்ட பாலம்; அக்கரையில் நின்றவர்களைக் காப்பாற்றிய இந்திய கடற்படை!


109-trapped-a-broken-bridge-road-in-thrissur-here-s-how-a-small-indiannavy-team-helped

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Aug, 2018 12:53 pm
  • அ+ அ-

கேரள மாநிலம் திரிச்சூரில் பாலம் ஒன்று பாதி அடித்துச் செல்லப்படவே அக்கரையில் நின்ற மக்களை துரிதமாக செயல்பட்ட கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

இது பற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அந்த வீரர்களுக்கு பாராட்டுகளை அள்ளிக் குவித்து வருகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 10 நாட்களாக மழை பெய்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். இந்நிலையில், மீட்புப் பணிக்காக முப்படையினரும், பேரிடர் மீட்புப் பணியிரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் கடந்த 19-ம் தேதி திரிசூரில் நடந்த மீட்புப் பணி தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது.
அகஸ்ட் 19-ம் தேதி காலை சீனியர் லெப்டினன்ட் புல்கிட் சோனி தலைமையில் 3 நீச்சல் வீரர்கள் கொண்ட குழுவுக்கு மேலிடத்திலிருந்து அழைப்பு வந்தது. உடனடியாக திரிச்சூர் கூடுதல் கலெக்டருடன் தொடர்பு கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவர்களும் அவ்வாறே செய்தனர். அந்த 4 பேர் கொண்ட சிறிய குழு திரிச்சூரில் உதவி தேவைப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஒரு கரையில் நின்று பார்த்தபோது பாலத்தின் மறுபகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் உதவிக்காக காத்து நின்றிருந்தனர்.

உடனடியாக செயல்பட்ட வெறும் 4 வீரர்கள் கொண்ட அந்தக் குழுவினர் பெரிய உறுதியான கயிறுகளை இணைத்து பாலத்தின் இரு முனைகளையும் இணைத்தனர். பின்னர் அந்த கயிறு வழியாக ஒவ்வொருவராக மீட்கத் தொடங்கினர். மதியம் 3 மணிக்கு ஆரம்பித்த மீட்புப் பணியானது மாலை 7.30 மணியளவில் முடிந்தது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு குடிதண்ணீர், பழங்கள், பிரெட் ஆகியன வழங்கப்பட்டன.

சிறிய குழுவாக இருந்தாலும் உறுதியுடன் செயல்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close