உடனே ஹெலிகாப்டர் வராவிட்டால் 10,000 உயிர்கள் பறிபோகும்!- கதறிய கேரள எம்.எல்.ஏ.

கேரள மாநிலம் செங்கானூர் தொகுதி எம்.எல்.ஏ. சாஜி செரியன் தனது தொகுதிக்கு ஹெலிகாப்டரை அனுப்பி மக்களை மீட்காவிட்டால் 10,000 உயிர்கள் பறிபோகும் என கதறியுள்ளார்.
தனது தொகுதியில் வெள்ள பாதிப்புகள் குறித்து வெள்ளிக்கிழமை தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சாஜி செரியன், "இங்கே நிலைமை மிக மிக மோசமாக இருக்கிறது. பாதுகாப்புப் படையினர் இங்கு பணியமர்த்தப்பட வேண்டும். எங்கள் பகுதிக்கு ஒரே ஒரு ஹெலிகாப்டராக அனுப்புமாறு மோடியிடம் சொல்லுங்கள். எங்களுக்கு உதவ யாரும் தயாராக இல்லை. ஒரே ஒரு ஹெலிகாப்டராவது அளிக்குமாறு நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். மீனவர்கள் சிக்கியுள்ளனர். நிறைய பேர் இறந்துள்ளர். அவர்களது சடலங்களை மீட்க வழியில்லாமல் இருக்கிறது" என்றார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறும்போது, "ஒட்டுமொத்த மீட்புப் பணிகளையும் மத்திய படைகளிடம் ஒப்படைக்காவிட்டால் நிலைமை மோசமடையும்" என கருத்து தெரிவித்திருக்கிறார்.
நிலைமை என்ன?
கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு பாலக்காடு, மலப் புரம், கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, திருச்சூர், கண்ணூர், எர்ணாக்குளம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. இதில் இடுக்கியில் மட்டும் வழக்கத்தை விட 84 சதவிகிதம் கூடுதல் மழை பெய் துள்ளது. இங்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக கொச்சி விமான நிலையம் வரும் 26-ம்தேதி வரை மூடப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரம் வரை, கேரளத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 324-ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளம், நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 1,568 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர்.