[X] Close

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்


atal-bihari-vajpayee-passes-away

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 16 Aug, 2018 17:41 pm
  • அ+ அ-

மூன்று முறை பாரதப் பிரதமராக இருந்தவரும் பாஜகவின் மிக மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் மறைந்தார். அவருக்கு வயது 93. மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 

வாஜ்பாய் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்ப்டடு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரகப் பாதையில் நோய்த் தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்காக, கடந்த 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

நீரிழிவு நோயாளியான வாஜ்பாய்க்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே செயல்பட்டு வந்தது. அவர் கடந்த 2 நாட்களாக செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சுவாசித்து வந்தார். இந்நிலையில் அவரது உயிர் இன்று (ஆகஸ்ட் 16 2018) பிரிந்தது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்:

அடல் பிஹாரி வாஜ்பாய் டிசம்பர் 25 1924-ல் பிறந்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி என  4 முறை வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றினார்.

வெறும் 13 நாட்கள்:

1996-ல் வாஜ்பாய் முதன்முதலில் பிரதமரானார். அப்போது அவர் 13 நாட்கள் மட்டுமே பிரதமராக பதவி வகித்தார். இரண்டாவது முறையும் வாஜ்பாயின் பிரதமர் பதவிக்காலம் நீண்ட பயணமாக அமையவில்லை. 1998 மார்ச் 19-ம் தேதி தொடங்கி 13 மாதங்கள் பிரதமராக இருந்தார். முதலில் 13 நாட்கள் இரண்டாவது முறை 13 மாதங்கள் என பிரதமர் பதவி முடிவடைந்தாலும் அவர் சற்றும் துவண்டு போகவில்லை. 
பல்வேறு அரசியல் கட்சிகளையும் கூட்டணி சேர்த்து 1999-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். 1999 அக்டோபர் 13-ல் பிரதமராகப் பதவியேற்றார். அந்தமுறை முழுமையான பதவிக்காலம் அவருக்கு சாத்தியமானது. 

நாட்டின் பிரதமராகப் பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் என்ற பெருமையை வசப்படுத்தினார்.

அணுசக்தி இந்தியா:

நாட்டின் பிரதமராக மிகக் குறுகிய காலம் பணியாற்றினாலும்கூட இந்தியாவை அணுஆயுத நாடாக அடையாளம் காட்டிய பெருமை வாஜ்பாயைச் சேரும். அவரது ஆட்சிக்காலத்தில்தான் போக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அப்துல் கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவைக் கொண்டு அணு ஆயுத சோதனையை அவர் சாத்தியப்படுத்தினார். 

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வாஜ்பாயிக்கு வழங்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close