[X] Close
 

கடும் மழை எதிரொலி: ஓணம் கொண்டாட்டங்களை கைவிடும் கேரள அரசாங்கம்


onam-festivities-cancelled

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 14 Aug, 2018 18:22 pm
  • அ+ அ-

கடும் மழையால் முன்னெப்போதும் இல்லாத அளவு பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்த நிதியை நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. 

கேரளாவில் ஆகஸ்ட் 8-ஆம் தேதியிலிருந்து பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு என மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 39 பேர் இதில் உயிரிழந்துள்ளனர். 20,000 வீடுகள் அழிந்துள்ளன, மேலும் 10,000 கிலோமீட்டர் சாலை சேதமடைந்துள்ளது. 

அரசு சார்பாக ஓணம் கொண்டாட்ட விழாவை ரத்து செய்ய இம்முறை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, நிவாரணப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  இம்முறை ஓணம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வருகிறது

வழக்கமாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாவட்டை தலைமையகங்களிலும், மாநிலத் தலைநகரிலும் அரசு நிகழ்ச்சிகளை நடத்தும். சாலைகள் ஒளியூட்டப்பட்டு, கைவினைப் பொருட்கள் கண்காட்சி, கேரள நாட்டுப்புறக் கலைகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கடைசியில், மாநிலத் தலைநகரில் பிரம்மாண்ட பேரணியுடன் நிகழ்ச்சி முடிவுக்கு வரும். 

முன்னதாக, ஒவ்வொரு வருடமும் நடக்கும் நேரு கோப்பை படகுப் பந்தயப் போட்டியையும் கேரள அரசு ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

- பிடிஐ



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close