[X] Close

ஒரே நேரத்தில் மூன்று பெண் நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறை! 


first-time-in-its-68-year-history-supreme-court-to-have-three-sitting-woman-judges

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Aug, 2018 15:25 pm
  • அ+ அ-

உச்ச நீதிமன்றத்தின் 68 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில் மூன்று பெண் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைந்திருக்கிறது. நீதிபதி ஆர்.பானுமதி, நீதிபதி இந்து மல்ஹோத்ரா மற்றும் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகிய நீதிபதிகள் தற்போது உச்ச நீதிமன்றத்தின் பெண் நீதிபதிகளாக இருக்கின்றனர்.

உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை 7 பெண் நீதிபதிகள் இருந்துள்ளனர். பாத்திமா பீவி தான் முதல் பெண் நீதிபதி. 1989-ல் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

அதன் பின்னர் சுஜாதா மனோகர், ரூமா பால், ஞான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ஆர்.பானுமதி, இந்து மல்ஹோத்ரா ஆகியோர் நீதிபதியாக பதவியேற்றுள்ளனர். இந்த வரிசையில் தற்போது நீதிபதி இந்திரா பானர்ஜி இணைந்துள்ளார்.

நீதிபதி பாத்திமா பீவி, சுஜாதா மனோகர், ரூமா பால் ஆகியோர் அவர்களது பதவிக்காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் தனி பெண் நீதிபதிகளாக இருந்தனர். நீதிபதி பாத்திமா பீவி 1992-ல் ஓய்வு பெற்றார். நீதிபதி சுஜாதா மனோகர் 1994-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று 1999 வரை பதவியில் இருந்தார். நீதிபதி ரூமா பால் 2000-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். 2006-ல் அவர் ஓய்வு பெற்றார்.

அதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதி யாரும் பதவியேற்கவில்லை. பின்னர் 2010-ல் ஞான் சுதா மிஸ்ரா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அதுவரையில் ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே இருந்துள்ளனர்.
2011-ல் இந்த ட்ரெண்ட் உடைக்கப்பட்டது. நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். இதன் காரணமாக இரண்டு பெண் நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் ஒரே காலகட்டத்தில் அமர்வில் இருக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால், குறைந்த காலத்திலேயே நீதிபதி தேசாய் ஓய்வு பெற்றார். மீண்டும் ஒரே ஒரு பெண் நீதிபதி நிலை நீடித்தது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்து மல்ஹோத்ரா உச்ச நீதிமன்ற நீதிபதியானார். மீண்டும் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை இரண்டானது. தற்போது இந்திரா பானர்ஜியும் இணைவதால் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. 2020 வரை உச்ச நீதிமன்றத்தில் மூன்று பெண் நீதிபதிகள் இருப்பார்கள். நீதிபதி பானுமதி ஜூலை 19 2020-ல் ஓய்வு பெறுகிறார். நீதிபதி இந்து மல்ஹோத்ரா மார்ச் 13 2021-ல் ஓய்வு பெறுகிறார் நீதிபதி இந்திரா பானர்ஜி செப்டம்பர் 24 2022-ல் தான் ஓய்வு பெறுகிறார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close