[X] Close

குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் அச்சம் ஏன்?


assam-s-draft-nrc-released

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Jul, 2018 17:13 pm
  • அ+ அ-

அசாம் மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு அம்மாநில மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வங்கதேச எல்லையை ஒட்டி அசாம் மாநிலம் அமைந்திருப்பதால் இங்கு வங்கதேச மக்கள் அவ்வப்போது குடியேறி வருகின்றனர். இந்நிலையில், அசாம் மாநிலத்தின் சொந்த மக்கள் குறித்து கணக்கெடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுக்கும் விதமாக இது செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் கணக்கெடுப்புக்குப் பின்னரான வரைவுப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அசாம் மாநில மக்கள் தொகை 3.29 கோடி ஆனால் இதில் 2.89 கோடி மக்களின் விவரங்களே பதிவாகியுள்ளன. எஞ்சியுள்ள 40 லட்சம் பேரின் நிலவரம் கேள்விக்குறியாக இருக்கிறது.

பெயர் விடுபட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படக்கூடும் என்றும் சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடும் என்றும் தகவல்கள் பரவிய நிலையில் அச்சம் பரவியது. அசாம் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்ட சூழலில்தான் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றோர் மத்திய அரசு பிரிவினைவாத அரசியல் செய்வதாகக் கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்தக் குற்றச்சாட்டை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "தேசிய மக்கள் பதிவேடு பாரபட்சமற்றது, பெயர் இடம் பெறவில்லையென்று யாரும் அச்சப்பட வேண்டாம்.  இது ஒரு வரைவு அறிக்கை மட்டுமே இறுதிப்பட்டியல் அல்ல. பெயர் விடுபட்டவர்கள் தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படும். பெயர்கள் இடம் பெறாவிட்டாலும் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஒரு சிலர் வேண்டும் என்றே அச்ச உணர்வை உருவாக்க திட்டமிடுகின்றனர்" என்று விளக்கமளித்தார்.

ஆனால், பெயர் விடுபட்ட இந்த 40 லட்சம் பேரும் அடுத்த தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பதைத் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி ஒருவர் கூறியதாக வெளியான தகவல் பீதியைக் கிளப்பியிருக்கிறது. 

1971 மார்ச் 21-ம் தேதி வரையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ அசாமில் வாழ்ந்ததற்காக அத்தாட்சி உள்ளவர்கள் மட்டுமே அசாம் மக்களாக ஆணையம் கணக்கில் கொள்வதால் 1971-க்குப் பின்னர் குடிபெயர்ந்தவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். தாங்கள் நாடு கடத்தப்பட்டால் எங்கு செல்ல முடியும்? என்ற கேள்வியில் நிற்கின்றனர்.
இதன் காரணமாகவே அசாம் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

40 லட்சம் பேர் என்பது மிகப் பெரிய ஜனத்தொகை. நாடற்ற மக்களாக 40 லட்சம் பேரும் நிற்பது தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close