[X] Close

அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக் கொடி: கடுமையாக தாக்கப்பட்ட மாணவிகள்


amithsha

  • kamadenu
  • Posted: 28 Jul, 2018 15:55 pm
  • அ+ அ-

இந்து குணசேகர்

உத்தரப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் பாதையில் கருப்புக் கொடி காட்டியதாக அலகாபாத் பல்கலைகழகத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் போலீஸாரால் கடுமையாக சாலையில் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில் மாணவிகள் இருவர், மற்றும் மாணவர் ஒருவரும் பாஜக தலைவர் அமித்ஷா வரும் ஜீப்பைத் தடுத்து நிறுத்தி தங்கள் கைகளிலிருந்த கருப்புக் கொடியை காட்டுக்கின்றனர். 

 அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அந்த மாணவிகளை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று அவர்களது லத்தியை கொண்டு கடுமையாக தாக்குகின்றனர். பின்னர் அந்த மாணவிகளை கைது செய்து ஜீப்பில் ஏற்றிச் செல்கின்றனர். 

மாணவிகளை தாக்கிய போலீஸாரின் செயலை, பலரும் கண்டித்துள்ளனர். மேலும் அந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில், "மாணவர்கள் இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். நேகா யாதவ், மற்றும் ராமா யாதவ், கிஷிண் மவுரியா அலகாபாத் பல்கலைகழகத்தைச் சேர்ந்த இந்த மாணவர்கள் சமாஜ்வாடி கட்சியின் மாணவர்கள் பிரிவில் உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சமாஜ்வாடி கட்சி தரப்பில்,” மாணவர்கள் அமைதியான முறையிலேயே கருப்புக் கொடியை காட்ட முயன்றனர். ஆனால் அவர்களை போலீஸார் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். பணியில் இருந்த ஆண் காவலர்கள் பெண் மாணவிகளை கடுமையாக தாக்கியுள்ளனர்” என்று கூறியுள்ளது. 

இதுகுறித்து காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த பெண்கள் செய்வதை நீங்கள் செய்வதற்கு உங்களுக்கு தைரியம் தேவை. இந்தப் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக பல இடங்களில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் கருப்புக் கொடிகளை பேரணியில் பயன்படுத்துவதை போலீஸார் தடை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close