[X] Close
 

மகாராஷ்டிரம் ஏன் பற்றி எரிகிறது?


maharashtra-bandh

  • பாரதி
  • Posted: 25 Jul, 2018 12:56 pm
  • அ+ அ-

மகாராஷ்டிராவில் ஏன் பந்த் நடக்கிறது? எதற்காக வன்முறைகள் நடக்கின்றன? மாநிலமே ஸ்தம்பித்துப் போக என்ன காரணம்? எதற்காக மாநிலமே பற்றி எறிகிறது எனக் கேட்கிறீர்களா?

இதற்கெல்லாம் காரணம் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த ஜனத்தொகையில் 33% பேர் மராத்தா வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோருகின்றனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, ஏழை மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போதே செய்யுங்கள் 'Now or never' என்று கூறி அவர்கள் போராட்டக் களத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். 

மராத்வாடா, மேற்கு மகாராஷ்டிரா, கொங்கன் பகுதிகளில் மராத்தா கிராந்தி மோர்சா அமைப்பினரின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பீட், நாசிக் பகுதிகளில் பேருந்துகளுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. கோதாவரி ஆற்றில் போராட்டக்காரர் ஒருவர் மூழ்கி உயிரை மாய்த்தார்.

இப்போது போராட்டக்காரர்கள் மகாராஷ்டிரா முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர். தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் முதல்வர் ராஜினாமா செய்யும்வரை போராடுவோம் என்று சூளுரைத்துள்ளனர். அரசு வேலைகளில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இட ஒதுக்கீடு வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. அத்துடன், தங்கள் இனத்தைப் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து மராத்தா கிராந்தி மோர்சா அமைப்பின் மனோஜ் அகாரே "மகாராஷ்டிர அரசு நினைத்தால் உடனடியாக ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மராத்தா சமூகத்தினரை பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பட்டியலில் சேர்த்துவிட முடியும். ஆனால், அவர்களிடம் அதற்கான அரசியல் துணிவு இல்லை. இந்த விளையாட்டை நீட்டித்து மராத்தா சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது" எனக் கூறினார்.

ஆனால், அரசோ இதை மறுக்கிறது. ஓபிசி அந்தஸ்து வழங்கும் விவகாரம் ஏற்கெனவே ஓபிசி ஆணையத்தில் இருக்கிறது. அவர்கள்தான் முடிவை அறிவிப்பார்கள் என்கிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் நெருக்கடி அளிப்பதாக மராத்தா இனத்தலைவர்கள் மீது அரசு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.

அரசாங்கம் நெருக்கடிக்கு பணியுமா? இல்லை மராத்தா சமூகம் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புமா என்று வன்முறைகளால் இயல்பு வாழ்க்கை முடங்கி பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close