[X] Close

ரூ.25,000 ஜீவனாம்சத்தை ரூ.1, 2 நாணயங்களாகக் கொடுத்த வழக்கறிஞர்: அதிர்ந்துபோன நீதிபதி


hc-lawyer-brings-alimony-in-coins-wife-says-mockery-of-court

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 Jul, 2018 10:52 am
  • அ+ அ-

மனைவிக்கு வழங்கவேண்டிய ரூ.25,000 ஜீவனாம்ச பணத்தை ரூ.1, 2 சில்லறையாகக் கொடுத்து வழக்கறிஞர் ஒருவர் அவரது மனைவியை வெறுப்பேற்றியதுடன் நீதிமன்றத்தையும் வியப்புக்குள்ளாக்கி இருக்கிறார். பஞ்சாப் மாநில கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில்தான் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. 

பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருப்பவர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கிறது. 2015-ம் ஆண்டு முதல் வழக்கு நடந்து வருகிறது. 

அப்போது வழக்கில் ஆஜராக வந்த வழக்கறிஞர் தனது மனைவிக்கு அளிக்க வேண்டிய ஜீவனாம்ச பணத்தையும் உடன் எடுத்துவந்தார். 2 பைகளில் தனது ஜூனியர்கள் உதவியுடன் அவர் பணத்தை எடுத்து வந்தார்.

பணப்பையைத் திறந்து பார்த்தபோது அவ்வளவு ரூ.1, 2 நாணயங்களாக இருந்தன. இதனைப் பார்த்து நீதிபதி திகைத்துப் போயுள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் மனைவியோ தனது கணவர் நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாகவும் தன்னை ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தி வேதனைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர், தான் இதற்கு முன்னரும் அவருக்கு ஜீவனாம்சம் வழங்கியிருப்பதாகவும். தன்னால் இப்போது இப்படித்தான் ஜீவனாம்சத் தொகையை வழங்க முடிந்தது என்றும் இந்தத் தொகையானது தான் ஒரு கோயிலில் தொண்டு செய்து பெற்றதாகவும் கூறினார்.

மேலும், நீதிமன்ற உத்தரவில் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று மட்டும்தான் உள்ளதே தவிர எந்த முறையில் தர வேண்டும் என்றில்லை என்றார்.

நீதிமன்றத்துக்கு அவர் கொண்டுவந்த நாணயங்களை எண்ண நேரமில்லாததால் வழக்கு விசாரணை ஜூலை 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது. 

வழக்கு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கறிஞரின் ஜூனியர்கள் இருவரும் பணப் பையை நீதிமன்ற அலுவலக அறைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவர்கள் நாணயங்களை எண்ணியபோது ரூ.24,600 இருந்தது. இதனையடுத்து அந்த வழக்கறிஞர் ரூ.100 நோட்டுகள் 4-ஐ வைத்து ரூ.25,000/- ரொக்கத்தை சமன் செய்தார். ஆனால், அதற்குள் நீதிமன்ற அலுவல் நேரம் முடிந்துவிட்டதால் பணத்தை எடுத்துச் சென்ற வழக்கறிஞர் அடுத்த விசாரணையின்போதும் இதே வடிவில் ஜீவனாம்சத்தைக் கொண்டு வருவதாகக் கூறினார்.

இது குறித்து வழக்கறிஞரின் மனைவி, "நான் ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த 2014-ல் தான் இந்தியா வந்தேன். அதே ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி எங்களுக்குத் திருமணம் நடந்தது. ஆனால், 3 மாதங்களிலேயே எங்களுக்குள் ஒத்துவரவில்லை. மே மாதம் எனது கணவர் நீதிமன்ற பிரிவு கோரி வழக்கு தொடர்ந்தார்.

2015 பிப்ரவரி 8-ல் பிரிவதற்கான விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றார். பின்னர் மீண்டும் 2015 அக்டோபரில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். 2018 பிப்ரவரியில் நீதிமன்றம் எனக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. அந்தப் பணத்தைத் தான் அவர் இவ்வாறு கொண்டு வந்திருக்கிறார்" எனக் கூறினார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close