[X] Close

ஒரு தலைவன் வருகிறான்!- உரையால் பறைசாற்றிய ராகுல்


we-are-all-victims-of-bjp-s-jumla-strike

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Jul, 2018 17:12 pm
  • அ+ அ-

ஜனநாயக அரசியலில் எப்போதெல்லாம் யதேச்சதிகாரம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் ஒரு தலைவன் வெளிவர வாய்ப்பும் உருவாகிறது.

அப்படித்தான் இன்றும் இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு வாய்ப்பு உருவானது. அந்த வாய்ப்பில் கனகச்சிதமாகப் பொருந்தி தனது உரையாலும் உடல்மொழியாலும் செயலாற்றலாலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தேவைதானா? எப்படிப்பார்த்தாலும் எண் கணிதம் அவர்களுக்குத்தானே ஆதரவாக இருக்கிறது என்று எழுந்த வாதவிவாதங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ராகுல் காந்தியின் 15 நிமிட உரை.

ராகுலின் இந்த உரை ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இத்தனை காலமாக மீம்ஸ்களையும் ஹேஷ்டேகுகளை போட்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த வந்த நெட்டிசன்கள் குரல்களை மட்டும் அதிருப்தியில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் குரலாகவும் ஓங்கி ஒலித்தது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

நாடாளுமன்றத்துக்கு வெளியே மழை பெய்து கொண்டிருக்கும்போது உள்ளே இடி முழங்கியதுபோல் உரையாற்றிக் கொண்டிருந்தார் ராகுல் காந்தி.
இத்தனை வேகத்தை யாரும் ராகுலிடம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ராகுல் பேசியதாவது:


"தெலுங்கு தேசத் தலைவர் ஜெயதேவ் கல்லாவின் பேச்சை ஆழமாகக் கவனித்தேன். நீங்கள் 21-ம் நூற்றாண்டின் விந்தையான அரசியல் ஆயுதத்தால் பாதிகப்பட்டிருக்கிறீர்கள். இதற்குப் பெயர் ஜூம்லா ஸ்டிரைக். நீங்கள் மட்டுமல்ல விவசாயிகள், தலித்துகள், பழங்குடிகள், இளைஞர்கள், பெண்களும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். 
ஜூம்லா ஸ்டிரைக்கின் அறிகுறிகள் என்ன தெரியுமா. முதலில் உங்களுக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் பெருமளவில் கடத்தப்படும் பின்னர் அதிரிச்சியும் வேதனையும் தொடரும்.


இந்திய இளம் தலைமுறையின் பிரதமர் மோடியை நம்பினார்கள். அவரது ஒவ்வொரு உரையிலும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வக்குறுதி அளித்தார். ஆனால் இன்று வெறும் 4 லட்சம் வேலை வாய்ப்புகள்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எஞ்சியவர்கள் இன்னமும் வேலை வாய்ப்பில்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். சீனாவில் 24 மணி நேரத்தில் 50,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.


பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகிய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் தொழில்துறை மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் உயிர்நாடி பணப் பரிவர்த்தனை. ஆனால், அரசாங்கம் தோதாக அதை மறந்துவிட்டது. நான் சூரத் சென்றிருந்தபோது சிறு குறுந் தொழிலாளர்கள் பணமதிப்பு நீக்கத்தால் தாங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.


பணமதிப்பு நீக்க நடவடிக்கையோடு நின்றுவிடவில்லை. ஜிஎஸ்டியை அமல்படுத்தினீர்கள். நாங்கள் சிங்கிள் ரேட் ஜிஎஸ்டியை முன்மொழிந்தோம். ஆனால் நீங்கள் பல அடுக்கு ஜிஎஸ்டியை அமல்படுத்தினீர்கள். சிறு விவசாயிகள் மீது மோசமான தாக்குதலை நடத்தியுள்ளீர்கள். அவர்களது வாழ்க்கையை நரகமாக்கியுள்ளீர்கள்.
வரலாற்றில் முதன்முறையாக இந்திய தேசம் அதன் பெண்களைப் பாதுகாக்க முடியாத நிலையில் இருப்பதாக சர்வதேச அரங்கில் கருத்து உருவாகியுள்ளது. பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். பெருமளவில் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், பிரதமர் இது குறித்து எதுவும் பேசாமல் மவுனியாக இருக்கிறார்.


சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தபோது சீன ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர். பின்னர் டோக்லாம் வரை ஊடுருவினர். அப்போது இந்திய ரானுவ வீரர்கள் அரணாக நின்று நாட்டைக் காத்தனர். ஆனால், சீனா சென்ற பிரதமர் மோடி டோக்லாம் பற்றி பேசப்படாது என்று கூறிவிட்டார். சீன ராணுவத்தினரை எதிர்த்து நின்ற நமது வீரர்களின் துணிச்சலை மோடியால் பிரதிபலிக்க முடியவில்லை. அவர் நமது வீரர்களை ஏமாற்றிவிட்டார். மாறாக சீன அதிபருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார் பிரதமர் மோடி.


இந்தியா வந்திருந்த பிரான்ஸ் அதிபரை நான் நேரில் சந்தித்தேன். ரஃபேல்ஸ் போர் விமான வியாபாரத்தில் அது என்ன ரகசிய உட்பிரிவு என வினவினேன். ரகசிய உட்பிரிவு என்று அதில் எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டார். அப்படி என்றால் பிரதமர் மோடியின் அழுத்தத்தின் பெயரில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய்யுரைத்திருக்கிறார். 


பிரதமர் மோடிக்கும் நாட்டின் பெரும் பணக்கார தொழிலதிபர்களுக்கு இடையேயான உறவு என்னவென்பதை எல்லோருமே அறிவர். அந்த தொழிலதிபர்களின் பணம்தான் மோடி என்ற நபரை சந்தைப்படுத்த பயன்படுகிறது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.


அப்படிப்பட்ட பெரும் பணக்காரருக்காகத்தான் ரஃபேல்ஸ் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அந்த முக்கியஸ்தர் இதன் மூலம் ரூ.45,000 கோடி பலனடைந்திருக்கிறார். அவருக்கு ரூ..35,000 கோடி கடன் இருந்தது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி உண்மையானவராக இல்லை என்பதுதான் உண்மை. பிரதமர் பாதுகாவலராக இருப்பதற்குப் பதிலாக ஊழலில் பங்கேற்பாளராக இருந்திருக்கிறார்.

நான் பிரதமரின் கண்களை உற்று நோக்கினேன் ஆனால் அவர் என் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்க்கிறார். பிரதமர் சிரிக்கிறார் ஆனால் அவருக்குள் ஏதோ ஒருவித பதற்றம் கடந்து செல்கிறது.


மோடி அவர்களே.. நீங்கள் எப்போதும் சூட்டும் பூட்டும் அணிந்த பெரும் பணக்காரர்களிடம்தான் பேசுகிறீர்கள். சிறு, குறுந் தொழில் மூலம் பணம் சம்பாதித்தவர்கள் எல்லாம் களவாடப்பட்டவர்கள் போல் நிற்கின்றனர். இதுதான் நிதர்சனம். இதை நீங்கள் மாற்ற முடியாது. 


பெரும் பணக்காரர்களுக்கு வழியே சென்று உதவுகிறீர்கள் ஆனால் ஏழைகளுக்கு எதுவுமே செய்ய மறுக்கிறீர்கள். விவசாயிகள் கடன் தள்ளுபடிக்காக இரைந்து நிற்கின்றனர். நிதியமைச்சரோ முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறுகிறார். இந்தியாவைத் தவிர உலக நாடுகள் எல்லாவற்றிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. 
சற்று நேரத்துக்கு முன்னதாக எனது பேச்சு நன்றாக இருந்ததாகக் கூறி உங்களது கட்சி உறுப்பினர்களே என்னிடம் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர். இந்த உணர்வு உங்கள் கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்துக்குமே இருக்கிறது. இந்த உணர்வுதான் வரவிருக்கும் தேர்தலில் உங்களைத் தோற்கடிக்கப்போகிறது"

இவ்வாறு ராகுல் காந்தி உரையாற்றினார்.

உரையை முடிக்கும்போது "நீங்கள் என்னை பப்பு என்று அழைத்தாலும்கூட நான் துளி அளவேனும் உங்களை வெறுக்கமாட்டேன். உங்களுக்குள் அன்பை விதைப்பேன்" என்று கூறி பிரதமர் மோடியின் இடத்துக்குச் சென்று அவரை ஆரத்தழுவினார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சு 2019 மக்களவைத் தேர்தலில் மோடிக்கு எதிராக ராகுலை நேர் நிறுத்த வலுவான அடித்தளம். மோடியை சந்தைப்படுத்த ஆர்.எஸ்.எஸ்., ஐடி பிரிவுகள் என பலதரப்பிலிருந்தும் பகீரத பிரயத்னம் செய்யப்பட்டு மோடி அலை உருவாக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு உரையின் மூலம் தன்னை அரசியல் களத்தில் வெகு நேர்த்தியாக ராகுல் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கிறார். குறிப்பாக தன் மீதான பப்பு என்ற அடையாளத்தைத் துடைத்தெறிய இன்றைய தருணத்தை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

இது வெறும், ராகுல் என்ற அரசியல்வாதியை சந்தை அடையாளத்துக்கானதாக மட்டும் நின்றுவிடாமல் 2019 தேர்தலுக்கான குறுகியகால கொள்கையாக நின்றுவிடாமல் மக்களுக்கான குரலாக என்றுமே நிலைக்கும்போது ஒரு தலைவர் நிச்சயம் கிடைக்கப்பெறுவார்.

அப்போதுதான், இன்று இணையவெளியில் ராகுல் உரையை ஒரு தலைவன் வருகிறான் என்ற சிலாகித்தவர்களின் கனவுகள் நனவாகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close