[X] Close

உ.பி. திருமண ஊர்வலமும் படைவீரன் திரைப்படமும்!


up-dalit-groom-who-won-battle-for-baraat-arrives-in-style-with-150-cops

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Jul, 2018 12:32 pm
  • அ+ அ-

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் சாதியம் தலைவிரித்தாடிக் கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் தலித் சமூகத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவர் ஊருக்குள் மாப்பிள்ளை ஊர்வலம் செல்ல நீதிமன்ற உதவியை நாட வேண்டியிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த இந்தத் திருமணம் அண்மையில் வெளியான தமிழ்த் திரைப்படம் படைவீரனில் வரும் சில காட்சிகளை நினைவுபடுத்துகிறது.

முதலில் ஊர்வலம் நடந்த கதையைப் பார்ப்போம். அப்புறம் திரைக்கதைக்கு வருவோம்.

உத்தரப் பிரதேச மாநிலம் கசன்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய ஜாதவ். சட்ட மாணவரான இவருக்கும் சீத்தலுக்கும் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) திருமணம் நடந்தது. இந்த நாளுக்காக அவர் ஆறு மாதங்கள் காத்திருந்தார். மணப் பெண் சம்மதத்துக்காக அல்ல, ஊருக்கும் மாபிள்ளை கோலத்தில் ஊர்வலம் செல்ல ஊரார் சம்மதத்தைப் பெற. ஆம், தலித் சமூகத்தினர் ஊர்வலம் செல்ல அந்த ஊருக்குள் அனுமதியில்லையாம்.

அந்த ஊரில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக தாக்கூர் சமூகத்தினர் இருக்கின்றனர். அதனால், அந்த ஊரில் தலித்துகள் திருமண ஊர்வலம் செல்ல இதுவரை அனுமதி அளிக்கவில்லை. அப்படியிருக்க சஞ்சய் ஜாதவ் தனது திருமண ஊர்வலத்தை ஊருக்குள் பிரம்மாண்டமாக நடத்த விரும்பியிருக்கிறார். ஆனால், தாக்கூர்களோ அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. 

இதனால் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் சஞ்சய். அதுதவிர முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் இணையம் வழியாக மனு தாக்கல் செய்திருக்கிறார். ஒருவழியாக ஊருக்குள் திருமண ஊர்வலம் செல்ல அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்தது. பிரச்சினைகள் ஏற்படக் கூடாது என்பதற்காக 150 காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். 

காவலர்கள் புடை சூழ சஞ்சய் ஜாதவின் திருமண ஊர்வலம் வெகு விமரிசையாக நடந்தது. தனது உரிமைக்காக போராடி வெற்றி கண்ட மணமகனையும் பொறுமையுடன் காத்திருந்த மணமகளையும் வாழ்த்துவோம்.

இந்த ஊர்வலத்துக்காக கசன்கஞ்ச் மாவட்ட நிர்வாகம் இருதரப்பினரையும் அழைத்துப் பேசியிருக்கிறது. தாக்கூர்கள் தங்கள் குடியிருப்புகள் வழியாக சஞ்சய்யின் திருமண ஊர்வலம் செல்ல அனுமதியளித்துள்ளனர். ஊர்வலத்துக்கான பாதை போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. 150 காவலர்களின் பாதுகாப்புடன் தான் ஊர்வலம் நடந்திருக்கிறது.

அண்மையில் படைவீரன் என்றொரு படத்தைப் பார்க்க நேர்ந்தது. சாதி எதிர்ப்புதான் படத்தின் களம். அந்தப் படத்தில் வரும் சில காட்சிகளை நினைவுகூர்வது இச்செய்திக்குப் பொருத்தமாக இருக்கும்.

ஊருக்குள் சாதிக் கலவரம் வெடிக்கும்போது ஹீரோவும் முக்கிய துணை கதாபாத்திரமும் பேசும் டயலாக் இவை:

விஜய் யேசுதாஸ்: படிச்சி கிழிச்சிட்டா... பெரிய பெரிய வேலைக்கு போய்ட்டா சாதி போயிருமா?

பாரதிராஜா: சாதி.. எந்த அளவுக்கு மனுஷப்பயன் படிச்சி முன்னேறியிருக்கானோ அந்த அளவுக்கு சாதியும் மதமும் தொத்திக்கிட்டுத்தானடா வந்திருக்கு. இங்க படிச்சிட்டு அமெரிக்கா போய் உட்கார்ந்திருக்கான். அங்கு ஃபேஸ்புக்குல எழுதுறான்,  நாங்க தான் ஆண்ட பரம்பரைன்னு.. இங்க ஒருத்தன் எழுதுறான் நாங்கதான் ஆண்ட பரம்பரைன்னு. ஏண்டா 200 வருஷம் வெள்ளக்காரன் ஆண்டானே.. அவன் ஆண்ட பரம்பரை இல்லையா?
இந்தக் கூட்டமோ அந்தக் கூட்டமோ எந்தக் கூட்டமா இருந்தாலும் அந்தக் கூட்டத்த மதிக்கப் பழகணும். அதுதான்டா நாகரிகம். அன்னிக்கு சண்டைக்குப் போணோம் மல்லு கட்டினோம் என்று பழைய வீரத்தையே பேசிகிட்டு இருக்கக் கூடாதுடா. விவேகம் வேணும்டா.. விவேகம்.

விஜய் யேசுதாஸ்: அப்ப சாதிய தூக்கிப் போட்ருங்கிறியா?

பாரதிராஜா: சாதி (நமட்டுச் சிரிப்பு) வச்சுக்கோடா வச்சுக்கோ. யார் வேணாம்னா? உன் கூடாரத்த அடையாளம் காட்டுடா. உன் அப்பன் ஆத்தாள அடையாளம் காட்டுனு மாதிரி. இந்தியன், தமிழன்னு சொல்றதில்லையா? 
ஆனா அடுத்தவன் கூட்டத்த மட்டும் தட்டாத. அந்த ரைட்ஸ் எவனக்கும் கிடையாது. 
டேய்.. காலங்காலமா ஒண்ணா விவசாயம் பண்ணி ஒத்த ஆத்து தண்ணிய குடிச்சி ஒரே நெல்ல அவிச்சி திண்ணவிங்கதானடா நாம. அதுவிட்டுட்டு இவன் தலைவன் அவன் தலைவன்னு எவன் பின்னாடியோ போனதலதான்டா நாடும் ஊரும் கெட்டு குட்டிச்சுவரா போச்சு.

எந்த அளவுக்கு மனுஷப்பயன் படிச்சி முன்னேறியிருக்கானோ அந்த அளவுக்கு சாதியும் மதமும் தொத்திக்கிட்டுத்தானடா வந்திருக்கு என்ற அந்தப் படத்தின் வசனம், ஒரு திருமண ஊர்வலத்துக்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைமைதான் இன்னும் நிலவுகிறது என்பதற்கான சாட்சி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close