[X] Close

சினிமா பாணியில் கடத்தல் நாடகம்.. எல்லாம் காதலுக்காக!


12-hour-hostage-situation-in-bhopal-ends-with-model-agreeing-to-marriage

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Jul, 2018 12:39 pm
  • அ+ அ-

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் சினிமா பாணியில் நடந்த கடத்தல் சம்பவம் காதலுக்காக நடந்த நாடகம் என்பது சிறிது நேரத்தில் அம்பலமானது.

போபாலின் மிஸ்ரோட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புகுந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த பெண்ணை பிணைக்கைதியாகப் பிடித்திருப்பதாக தெரிவிக்க நாடகம் தொடங்கியது. ஆனால், அந்த நபருக்கு அப்பெண்தான் கதவை திறந்துவிட்டார் என்பது பின்னர் விசாரணையில் தெரியவந்தது.

இன்று காலை 6 மணியளவில் ரோகித் என்ற இளைஞர் 30 வயது மாடல் அழகியின் வீட்டினுள் நுழைந்து கொண்டு கடத்தல் நாடகத்தை ஆரம்பித்தார். அண்டைவீட்டுப் பெண் வீட்டினுள் மர்ம ஆசாமி நுழைந்துவிட்டதாக அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளிக்க போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.

வீட்டினுள் நுழைய முயன்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை ரோஹித் கத்திரிக்கோலால் தாக்கினார். மேலும் உள்ளே நுழைய முயன்றால் தான் வைத்திருக்கும் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார். தனது கோரிக்கையை நிறைவேற்றுமாறு கூறினார்.


இதனையடுத்து போலீஸார் அந்த நபருடன் வீடியோ சேட் மூலம் தொடர்பு கொண்டனர். ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் 5-வது தளத்தை அடைந்த போலீஸார் ரோஹித்துடன் சமரசம் பேச முயன்றனர். ரோஹித் தனக்கு தண்ணீர், உணவு, மொபைல் சார்ஜர் மற்றும் ஸ்டாம்ப் பேப்பர் வேண்டும் என்று கேட்டார்.

போலீஸார் அவர் கேட்டதைக் கொடுத்தனர். பின்னர் அவரது கோரிக்கையைக் கூறுமாறு வற்புறுத்தினர். அதற்கு, ரோஹித் தானும் தான் பிணையாகப் பிடித்து வைத்திருக்கும் பெண் காதலர்கள். ஆனால், தங்கள் திருமணத்துக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்துவிட்டதகவும் அதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார். அந்தப் பெண் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டால் விடுவிப்பதாகவும் கூறினார்.

பின்னர் ஜன்னல் வழியாக தான் வழங்கிய ஸ்டாம்ப் பேப்பரில் அந்தப் பெண் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுவிட்டதாக வெற்றி சமிக்ஞை காட்டினார்.

12 மணி நேர சமரசத்துக்குப் பின்னர் ரோஹித் வீட்டினுள் போலீஸாரை அனுமதித்தார். இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இருவருக்கும் மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டது. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் காதல் திருமணத்துக்கு எவ்வித தடையும் இல்லை என்று எடுத்துரைக்கப்பட்டது. ஆனால், ரோஹித் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

பல்டி அடித்த பெண்..

ரோஹித்தை திருமணம் செய்து கொள்வதாக அவரிடம் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொடுத்த அந்தப் பெண் பின்னர் போலீஸில் வாக்குமூலம் அளிக்கும்போது தனக்கு ரோஹித்தை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்றார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில்தான் ரோஹித்திடம் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close