ரூ.90,000 பணத்தை பறிகொடுத்த முதியவர்; மீட்டுக்கொடுத்த போலீஸ்காரர்- குவியும் பாராட்டு

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ரூ.90000 பணத்தை தவறவிட்ட முதியவரிடமே அந்தப் பணத்தைச் சேர்த்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஸ்ரீநகர் முனிசிபல் கார்ப்பரேஷனில் வேலை பார்த்து அண்மையில் ஓய்வு பெற்றவர் அப்துல் அசீஸ் மல்லா. இவர் தனது ஓய்வுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பும்போது பணப்பையை தவறவிட்டார்.
அப்போது கமர்வாரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்த உமர் முஸ்தக் என்ற காவலர் ரூ.90,000 பணத்துடன் கேட்பாரற்றுக் கிடந்த பையைப் பார்த்திருக்கிறார். அதை திறந்து பார்க்க அதில் ரூ.90,000 பணம் இருந்திருக்கிறது.
உடனே அந்தப் பணத்தை அவர் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார். அதே வேளையில் மல்லாவும் காவல் நிலையத்தில் தனது பணப்பையை தவறவிட்டது குறித்து புகார் கொடுத்திருக்கிறார்.
இதனையடுத்து பணப்பை குறித்த அடையாளங்களை சரி பார்த்து போலீஸார் மல்லாவிடம் பையை ஒப்படைத்துள்ளனர்.
காவலர் முஸ்தக் பணப்பையை மல்லாவிடம் ஒப்படைக்கும் காட்சியை ஜம்மு காஷ்மீர் போலீஸார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். முஸ்தக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.