[X] Close
 

வேலையா? தொப்பையா?- கர்நாடகா ரிசர்வ் போலீஸுக்கு செக்!


karnataka-policemen-told-to-arrest-their-pot-bellies

  • பாரதி
  • Posted: 10 Jul, 2018 10:55 am
  • அ+ அ-

போலீஸ்காரர்கள் என்றாலே தொப்பை நினைவுக்கு வரும் அளவுக்கு தொப்பை போலீஸ்களை நாம் சினிமாவில் நிறையவே பார்த்துவிட்டோம். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாக்கள் பலவற்றிலும் இதைப் பார்த்திருக்கிறோம். அது உண்மைதானோ என்று எண்ணும் அளவுக்கு நிஜத்திலும் நிறைய போலீஸ்காரர்கள் தொப்பையுடன் தள்ளாடுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு ஒரு முடிவு கட்ட கர்நாடகா ரிசர்வ் போலீஸ் டிஜிபி ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

உடல் எடை பருமனாக இருக்கும் போலீஸ்காரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தீவிர உடற்பயிற்சி மற்றும் கண்டிப்பான உணவுப் பழக்கவழக்கங்களை பரிந்துரைத்து தொப்பையைக் குறைக்கச் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

இதற்கென காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தொப்பையைக் குறைக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்திருக்கிறார்.

இது குறித்து கர்நாடகா மாநில ரிசர்வ் போலீஸ் டிஜிபி பாஸ்கர் ராவ் கூறும்போது, "போலீஸ்காரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகா ரிசர்வ் காவல்படையில் 40 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட காவலர்களில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 150 பேர் லைஃப்ஸ்டைல் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர்.

இவர்களில் பலருக்கும் இதய நோய் பாதிப்பு, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் தாக்கியிருந்தது தெரியவந்துள்ளது.  மேலும், சிலர் புகை, மதுப்பழக்கத்துக்கும் ஆளாகியிருந்தனர். காவல்துறையில் இப்படி லைஃப்ஸ்டைல் நோய்களால் அதிகமானோர் இறப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. எனவே ஒழுங்கு நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளது. அதனாலேயே தொப்பையுள்ள காவலர்களைக் கண்டறிந்து ஜாக்கிங், ஸ்விம்மிங், டயட், தீவிர உடற்பயிற்சி என உட்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இதன் ஒரு பகுதியாக, காவலர்களுக்கு அரிசி சாப்பாட்டை கட் செய்துவிட்டு ராகி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காவலர்கள் ஒழுங்காக உடற்பயிற்சி செய்வதையும் ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதையும் கமாண்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close