இவர்கள்தான் லாலு, மன்மோகன் சிங், அத்வானி: நிஜத்தில் அல்ல திரையில்!

'தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்' படத்தில் ராஷ்டிரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர்களை அனுபம் கேர் இன்று அறிமுகம் செய்தார்.
'தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்' படத்தில் மன்மோகன்சிங் கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடிக்கவுள்ளார். ஏற்கெனவே இப்படத்தில் ராகுல் காந்தியாக, பிரியங்கா காந்தியாக நடிக்கவிருப்பவர்களை அறிமுகப்படுத்தினார்.
அந்த வரிசையில் லாலு, அத்வானி இன்று அறிமுகம் செய்யப்பட்டனர். லாலுவாக விமர் வர்மா, அத்வானியாக அவ்தார் சானி மற்றும் சிவ்ராஜ் பாட்டீலாக அனில் ரஸ்தோகி ஆகியோர் நடிக்கின்றனர்.
அவர்களது புகைப்படங்களை அனுபம் கேர் வெளியிட்டார்.
2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த 'தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற புத்தகத்தை முன்னாள் பத்திரிகையாளர் சஞ்சய்யா பாரு எழுதியுள்ளார். இவர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரது ஊடக ஆலோசகராக இருந்தவர்.
காங்கிரஸ் தலைமையில் 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் எவ்வாறு தனித்து செயல்படாமல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கைப்பாவையாக செயல்பட்டார் என்பது பற்றி இப்புத்தகத்தில் சஞ்சய்ய பாரு பதிவிட்டுள்ளார். இப்புத்தகம் 2014-ம் ஆண்டு வெளிவந்த போது மிகுந்த சர்ச்சைக்குள்ளனது. இப்புத்தகம் குறித்து "தன்னை சஞ்சய்யா பாரு முதுகில் குத்திவிட்டார்" என்று மன்மோகன் சிங் கருத்து தெரிவித்திருந்தார்.
தற்போது இப்புத்தகத்தைத் தழுவி அறிமுக இயக்குனர் விஜய் ரத்னாகர் குட்டே படம் இயக்குகிறார். புத்தகத்தின் தலைப்பான 'தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்' என்பதையே படத்துக்கும் தலைப்பாக வைத்துள்ளனர்.
அனுபம் கெர் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு தேசிய விருது பெற்ற அன்சல் மேத்தா திரைக்கதை எழுதுகிறார்.