[X] Close

கால்பந்து ஸ்டைலில் போக்குவரத்து அறிவுரை: கோல் போடுமா கொல்கத்தா போலீஸ்!


kolkata-police-uses-football-to-score-on-safe-driving-campaign

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Jul, 2018 10:14 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கால்பந்து போட்டி என்னவோ ரஷ்யாவில் நடந்தாலும் நம் நாட்டில் கேரளாவும் மேற்குவங்கமும் வடகிழக்கு மாநிலங்களும் கால்பந்து திருவிழாவை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றன.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதுபோல், கால்பந்து காலகட்டத்தில் விளையாட்டு போக்காகவே மக்களுக்கு முக்கியமான அறிவுரைகளை சொல்லிவருகிறது கொல்கத்தா போலீஸ். 

கடந்த ஜூன் 22-ம் தேதி கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்தார். அதில் "எல்லா பெனால்டிகளும் மிஸ் ஆவதில்லை" எனக் குறிப்பிட்டு அத்துடன் அயர்லாந்துக்கு எதிரான பெனால்டி ஷாட்டை மிஸ் செய்த மெஸ்ஸியின் புகைப்படத்தையும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டியிடன் காவலர் ஒருவர் அபராதம் வசூலிக்கும் புகைப்படத்தையும் சேர்த்துப் பகிர்ந்திருந்தார்.
அதேபோல் "வேகக் கட்டுப்பாட்டை மதிக்கவும்; எல்லோருமே மெஸ்ஸி அல்ல" என்றொரு வாசகத்தையும் கொல்கத்தா போலீஸ் சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்தி வருகிறது.

இப்படி மக்களுக்குப் பிடித்தமான விஷயங்கள் மூலம் போக்குவரத்து நெறிமுறைகளை உணர்த்த கொல்கத்தா போலீஸ் முயன்று வருகிறது. கொல்கத்தா போலீஸின் இந்த ட்வீட்களும் மீம்ஸ்களும் வைரலாகப் பரவுகின்றன.
மக்கள் விரும்பும் பாணியில் அறிவுரை சொல்லும்போது அவர்களுக்கு அது மனதில் பதியும் என்பதற்காக சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தை உலகக் கோப்பை கால்பந்து போட்டி வழியில் சொல்ல யோசனை கூறியது கொல்கத்தா போலீஸ் கமிஷனர்.
அவர் என்னவோ நல்லதற்காகவே இந்த யோசனையைக் கூறினாலும்கூட இதை வைத்துகூட நெட்டிசன்கள் சிலர் சண்டையடித்துக் கொள்கின்றனர்.

ரொனால்டோ விசிறி ஒருவர் கொல்கத்தா போலீஸுக்கு கேள்வி எழுப்பினார். "மெஸ்ஸியைவிட ரொனால்டோ மிக வேகமாக விளையாடுவதால் கொல்கத்தா போலீஸ் ஏன் மெஸ்ஸியை மட்டும் வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும்?" என அவர் ட்வீட் செய்தார்.

சாலை போக்குவரத்து விதிமுறைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே இலக்கு என்பதால் ரொனால்டோவையும் விட்டுவைக்காத கொல்கத்தா போலீஸ், "சாலையில் வாகனத்தை ஓவர்டேக் செய்து சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம். ரொனால்டோவும் மெஸ்ஸியும் இந்த வார இறுதியில் விளையாடுகின்றனர்" என்றொரு ட்வீட்டைப் போட்டது. மெஸ்ஸி, ரொனால்டோ புகைப்படங்கள் ஒருபக்கமும் ஓவர்டேக் செய்ய முயலும் பேருந்துகள் இன்னொரு பக்கமும் இருந்தன.
இப்படி வித்தியசமாக சாலை விதிகளை பிரச்சாரம் செய்து வரும் கொல்கத்தா போலீஸ் கோல் போடுமா?! என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close