[X] Close

22 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரூ.200 கடனை திருப்பித்தர இந்தியா வந்த கென்ய எம்.பி.


22-200

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:36 am
  • அ+ அ-

22 ஆண்டுகளுக்கு முன்பு, தான் வாங்கிய 200 ரூபாய் கடனை அடைப்பதற்காக கென்ய நாட்டு எம்.பி. ஒருவர் இந்தியா வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கென்யாவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் நியாய்கஹா டோங்கி. இவர் அங்குள்ள நியாய்பாரி சாச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இவர், மகாராஷ்ட்ராவின் அவுரங்காபாத் பகுதியில் உள்ள மவுலானா ஆசாத் கல்லூரியில் கடந்த 1985 முதல் 89-ம் ஆண்டு வரை படித்தவர் ஆவார். அந்த சமயத்தில், வான்கேட்நகர் என்ற பகுதியில் டோங்கி வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தார்.

மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்டவர் என்பதால், அன்றாட உணவுத் தேவைக்கே டோங்கி மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

அவரது இந்த வறுமை நிலை, அப்பகுதியில் மளிகை கடை வைத்திருந்த காஷிநாத் காவ்லிக்கு தெரியவந்தது. அதன் பிறகு, டோங்கியின் வீட்டுக்கு அவர் கேட்காமலேயே மாதந்தோறும் உணவுக்கு தேவையான பொருட்களை காஷிநாத் அனுப்பி வந்தார். இதற்கான தொகையை சிறிது சிறிதாக டோங்கியும் அவருக்கு செலுத்தி வந்தார்.

இந்நிலையில், கல்லூரி முடித்த பிறகு, டோங்கி தனது சொந்த நாட்டுக்கு திரும்பினார். அப்போது, காஷிநாத் காவ்லிக்கு அவர் ரூ.200 தர வேண்டியிருந்தது. அந்த கடனை இந்தியாவுக்கு விரைவில் திரும்பியதும் அடைத்து விடலாம் என டோங்கி நினைத்திருந்தார்.

ஆனால், குடும்ப சூழல், பொது வாழ்க்கை ஈடுபாடு ஆகியவற்றின் காரணமாக அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. இதற்கிடையே, அவர் அங்குள்ள ஜூபிலி கட்சியில் இணைந்து எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், எத்தனை வருடங்கள் சென்றாலும், காஷிநாத் காவ்லிக்கு தர வேண்டிய ரூ.200 கடன் மட்டும் அவரது மனதை பிழிந்து கொண்டிருந்தது. அப்போதுதான், எப்படியாவது இந்தியா வந்து அவரது கடனை அடைத்துவிட வேண்டும் என டோங்கி முடிவு செய்தார்.

அதன்படி, தனது மனைவியுடன் அண்மையில் இந்தியா வந்த டோங்கி, அவுரங்காபாத் பகுதியில் வசித்து வந்த காஷிநாத்தை தேடி கண்டுபிடித்து அவரிடம் 200 ரூபாயை வழங்கினார். அவர்கள் இருவரின் இந்த சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சிகரமாக இருந்ததாக டோங்கியின் மனைவியும், காஷிநாத்தின் குடும்பத்தினரும் தெரிவித்தனர்.

பின்னர், காஷிநாத்தின் வீட்டில் உணவருந்திய டோங்கியும், அவரது மனைவியும் கென்யா திரும்பிச் சென்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close