[X] Close

கேரளாவில் ரூ.105 கோடியில் யானைகள் புனர்வாழ்வு மையம்


105

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:08 am
  • அ+ அ-

நாட்டின் முதல் யானைகள் புனர்வாழ்வு மையம் கேரளாவில் அமைய இருக்கிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோட்டூர், காப்புகாடு பகுதியில் அகஸ்தியர் வனத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் அகஸ்தியர் பல்லுயிரினப் பூங்கா உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதலே இந்த மையத்தில் யானைகள் முகாமும் செயல்பட்டு வருகிறது. முகாமில் தற்போது 15 யானைகள் உள்ளன.

இந்த மையத்தை நவீனப்படுத்தி நாட்டின் முதல் யானைகள் புனர்வாழ்வு மையமாக மாற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கேரள அரசு தரப்பில் ரூ.105 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் அண்மையில் புதிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். அண்டை நாடான இலங்கையின் ’பின்னவல’ பகுதியில் யானைகள் புனர்வாழ்வு மையம் செயல்படுகிறது. அதை முன்மாதிரியாகக் கொண்டு இந்த மையத்தை மேம்படுத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

அமைதியான சூழல்

கோட்டூர் காப்புக்காடு பகுதியில் உள்ள பல்லுயிரினப் பூங்காவில் பிரதான வாயிலில் இருந்து இருநூறு அடி தொலைவுக்கு உள்ளே நடந்து செல்ல வேண்டும். அந்த நடைபயணத்தின்போதே ஆங்காங்கே யானைகள் பிளிரும் சப்தம் சங்கீதமாகக் கேட்கிறது. இந்த மையத்தில் படகுச் சுற்றுலா வசதியும் உள்ளது. மையத்தின் உள்ளே செல்ல ரூ.40 கட்டணம். தினசரி காலை மற்றும் மாலையில் தனித்தனி கூடாரங்களில் இருந்து குளிக்கவும், சாப்பிடவும் யானைகள் வெளியே அழைத்து வரப்படும். அப்போது 15 யானைகளையும் ஒன்றாகப் பார்ப்பது கண்களுக்கு விருந்தளிக்கும். இந்த மையம் நவீனமயமாக்கப்பட்டு புனர்வாழ்வு மையம் அமைவதன் மூலம் முகாமில் 50 யானைகள் வரை சேர்த்துக் கொள்ளப்படும். அதற்கான அடிப்படை வசதிகளும், யானைகள் தங்குவதற்காக தனித்தனிக் கூடாரங்களும் அமைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து மையத்தின் சரக அலுவலர் அனில்குமார் இந்து தமிழிடம் கூறியதாவது:கைவிடப்பட்ட, தனித்து விடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட யானைகளுக்கு இந்த மையம் அடைக்கலம் கொடுக்கிறது. யானை குறித்த முழுமையான புரிதலை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. இப்போது இந்த மையத்தில் ஒரு மருத்துவர் இருக்கிறார். அவர் புதன்கிழமைதோறும் யானைகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். கேரள அரசு ஒதுக்கியுள்ள நிதியின் மூலம் இங்கு யானைகளுக்காக பிரத்யேக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இனி இந்த மையம் வனவிலங்கு ஆர்வலர்கள், கால்நடைத் துறை மாணவர்களுக்கு அனுபவக் கல்வியாகவும் அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேரளத்தில் குருவாயூர் கோயிலில் மட்டும் 59 யானைகள் இருக்கின்றன. இதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு சூழல்களில் வனத் துறை மீட்ட யானைகளின் எண்ணிக்கை 507 ஆகும். இந்த யானைகளுக்கெல்லாம் புனர்வாழ்வு மையம் வரப்பிரசாதமாக அமையும் என்கின்றனர் கேரள வன ஆர்வலர்கள். மையத்தில் யானைப் பாகன்களுக்காக பயிற்சிக் கூடம், யானைகளுக்கான தகன இடம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன. யானையின் வாழ்வியல் குறித்து முழுதாக கற்றுக்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த மையம் 162 ஏக்கரில் விரிகிறது. வாரத்துக்கு ஒருமுறை அகஸ்திய வனப்பகுதிக்கு யானைகள் அழைத்துச் செல்லப்பட்டு புத்துணர்வூட்டப்படுகிறது.

யானையை தேர்ந்தெடுத்தல்

காட்டில் தனது கூட்டத்தைத் தொலைத்து தனிமையில் தவித்த யானைகள், வழிதெரியாது இயற்கையாக அமைந்த குழிகளில் விழுந்து தாயை பிரிந்த குட்டிகள், முறையான உரிமம் இல்லாததால் உரிமையாளர்களிடம் இருந்து வனத் துறையினர் பறிமுதல் செய்த யானைகள் ஆகியவை இங்கே இருக்கின்றன. ஒவ்வொரு யானையை கவனிப்பதற்கு ஒரு முதன்மை பாகனும், அவருக்கு உதவியாக மேலும் 2 பாகன்களும் உள்ளனர். இங்கே தாயைப் பிரிந்த ஐந்து குட்டிகள் உள்ளன. அதில் அர்ஜுனுக்கு 5 வயது, பூர்ணாவுக்கு மூன்றரை வயது, மனுவுக்கு இரண்டரை வயது, மாயாவுக்கு 2 வயது ஆகிறது.

இந்த முகாமில் இருப்பதிலேயே பொடியனான கண்ணனுக்கு ஒரு வயதாகிறது. இங்கு இருப்பதிலேயே வயதில் பெரியவர் சோமன். இந்த யானைக்கு 80 வயதாகிறது. திரட்சியான தந்தத்தோடு கம்பீரமாக இருக்கும் இந்த யானையை பார்த்தாலே வசீகரிக்கிறது. இருப்பதிலேயே கோபக்காரனான ராணாவுக்கு ஏழு வயது ஆகிறது. இவரின் கோபத்தை தணிக்கவும் இங்கு முயற்சிகள் நடக்கின்றன.

நெய்யாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான, அகஸ்திய வனப்பகுதியில் முகாம் அமைத்திருப்பதால் குளு,குளு சூழல் நிலவுகிறது. அணையின் ஒரு பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. இதில் யானைகளை காலை, மாலையில் குளிப்பாட்டுகின்றனர். அதை பார்வையாளர்கள் பார்ப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மையத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யானைகளின் அணிவகுப்பும் நடக்கிறது.

கும்கி பயிற்சி

முகாமில் இருக்கும் திடகாத்திரமான யானைகளை தேர்வு செய்து, அவற்றை கும்கி யானையாக பயிற்சி பெறவும் அனுப்பி வைக்கின்றனர். காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும்போது, அதை எதிர்க்ககும்கி யானைகளை பயன்படுத்துகின்றனர். இந்த மையத்தில் இருந்து உன்னிகிருஷ்ணன், அகஸ்தி, சுந்தரி என மூன்றுயானைகள் கும்கி யானைக்கான பயிற்சிக்காக வயநாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் உன்னிகிருஷ்ணன் பார்க்கவே ஐஸ்வரியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதால் அதற்கு மிகப்பெரிய ரசிகர் படை உள்ளது.

கோட்டூர் பல்லுயிர் பூங்காவில் செயல்பட்டு வரும் இந்த யானைகள் முகாம், இன்னும் பல வசதிகளுடன் புனர்வாழ்வு மையமாக மாறும்போது இந்திய அளவில் யானைகளுக்கான அருங்காட்சியகமாகவும் இது இருக்கும் என்கின்றனர் கேரள வனத்துறையினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close