[X] Close

இளையராஜா சாரைப் பிடிக்கும்; ரஹ்மானிடம் கோரஸ் பாட ஆசை: சங்கர் மகாதேவன் கண்டெடுத்த கலைஞன் ராகேஷின் பேட்டி


rakesh-a-coolie-gets-offer-to-sing

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Jul, 2018 19:18 pm
  • அ+ அ-

ஒரே பாடலில் வாழ்க்கையே மாறிவிடும் காட்சிகளை சினிமாவில் பார்த்திருக்கிறோம். ஆனால், சினிமா பாணியில் கேரள மாநிலம் ஆழப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது.

"உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே.."

கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இஷான் லாய்டு இசையமைப்பில் உருவான பாடல். இந்தப்பாடலை ராகேஷ் பாட அவரது நண்பர்கள் அந்தப் பாடலை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர வைரலாகிவிட்டது. கடினமான பாடலை மிகச் சாதாரணமாக அவர் பாடியவிதம் அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. இதில் ஹைலைட் பாடலை இசையமைத்துப் பாடிய சங்கர் மகாதேவனே இவருக்கு ரசிகரானதுதான்.

இவரது வீடியோவைப் பகிர்ந்த சங்கர் மகாதேவன், "இதுதான் வெற்றிக்கனி! இதைக் கேட்கும்போது என் தேசத்தின் திறமையை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். கலாச்சாரம் மிகுந்த என் தேசம் எத்தனை எத்தனை திறமைசாலிகளை உருவாக்குகிறது. யார் இந்த நபர்? அவரை நான் எப்படி அடையாளம் காண்பது? உங்கள் உதவி தேவை. அவருடன் பணியாற்ற விரும்புகிறேன்" எனக் கூறியிருந்தார்.

நல்லுள்ளம் படைத்த நம்ம நெட்டிசன்கள் ராகேஷின் போன் நம்பரை ஷேர் செய்ய அப்புறம் என்ன சங்கர் மகாதேவனே அவரிடம் பேசிவிட்டார். நாமும் ராகேஷிடம் பேசினோம்.  வெகு நேரம் அவரது ஃபோன் எங்கேஜ்டாகவே இருந்தது. ஒருவழியாக இணைப்பில் கிடைத்தார். மலையாள வாடையுடன் தமிழ் அழகாகவே பேசினார். 

நீங்கள் ராகேஷ் தானே.. நீங்கள்தானே அந்தப் பாடலைப் பாடினீர்கள்?
ஆமாம் மேடம் நான் தான் ராகேஷ். நிறைய மீடியாவிலிருந்து அழைப்புகள் வந்துவிட்டன. அந்தப் பாடலைப் பாடியது நான்தான். 

வாழ்த்துகள். உங்கள் குரல் இனிமையாக இருந்தது? இந்த திடீர் அடையாளத்தைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்?
நன்றி. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இதை எதிர்பார்க்கவேயில்லை.

உங்களைப் பற்றி சொல்லுங்களேன்..
நான் ராகேஷ். ஆலப்புழா மாவட்டம் நூரநாடு என் ஊர். அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி, அத்தை இதுதான் என் குடும்பம். இன்னும் திருமணம் ஆகவில்லை. கூலி
வேலை செய்கிறேன். 

இசை மீது ஆர்வம் எப்படி வந்தது?
எனக்கு சினிமா பாடல்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதுவும் தமிழ்ப்பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பாடுவேன். என் நண்பர்கள்தான் என்
ரசிகர்கள். அப்படி நான் சங்கர் சாரின் பாடலைப் பாடியபோதுதான் அவர்கள் வீடியோ எடுத்து ஷேர் செய்தனர்.

சங்கர் மகாதேவனோட ஃபேஸ்புக் போஸ்ட்டைப் பார்த்தீர்களா?
என் நண்பர்கள்தான் சொன்னார்கள். நான் சங்கர் சாரோட எல்லாப் பாட்டையும் மனப்பாடமாகப் பாடுவேன். அவரோட மிகப்பெரிய ரசிகன் நான். 

சங்கர் மகாதேவன் பேசினாரா?
ஆமாம் பேசினார். என்னால் அந்த நிமிடத்தை நம்பவே முடியவில்லை. நான் நிச்சயமாக பாக்கியம் செய்திருக்கிறேன். இல்லாவிட்டால் என்னைப் போன்ற எளிய நபரைத் தேடி அவ்வளவு பெரிய நபர் பேசியிருப்பாரா? 
என்னுடன் தொலைபேசியில் பேசிய அவர் எனது குரல் நன்றாக இருப்பதாகக் கூறினார். இப்போது அவர் லண்டனில் இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் சென்னை
வந்துவிடுவதாகக் கூறியிருக்கிறார். என்னை சென்னை வரச் சொல்லியிருக்கிறார். அவரை நேரில் பார்த்தால் என்னைப் போன்ற அதிர்ஷ்டசாலி இல்லை.

உங்கள் கனவு என்ன?
எனக்கு இளையராஜா சாரை ரொம்பப் பிடிக்கும். அவர் பாடல்களைப் பாடுவதில் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி என்று சொல்லிக்கொண்டே வானுயுர்ந்த சோலையிலேயே பாடலைப் பாடி அசத்தினார்.
ரஹ்மான் சார் இசையமைப்பில் ஒரு கோரஸாகப் பாடிவிட வேண்டும். என் கனவுகளில் இதுவும் ஒன்று.

ராகேஷின் கனவு நனவாகட்டும். ராகேஷுக்கு இசையமைப்பாளர்கள் கோபி சுந்தர், பண்டாலம் பாலன் ஆகியோர் வாய்ப்பு தருவதாகக் கூறியுள்ளனர். இதுமட்டுமல்ல நடிகர் கமல்ஹாசனின் செயலரும் ராகேஷைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். கமலின் வாழ்த்துகளைப் பகிர்ந்த செயலர் விரைவில் கமல் தொலைபேசியில் அழைப்பார் என்றும் கூறியிருக்கிறார்.

ராகேஷ் கடந்த இரண்டு மாதங்களாக கர்நாடக சங்கீதத்தையும் கற்றுக் கொள்கிறாராம். மீண்டும் ராகேஷுக்கு வாழ்த்துகள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close