[X] Close

கர்நாடகா, கோவா விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 08:40 am
  • அ+ அ-

கர்நாடகா, கோவா மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழலுக்காக பாஜகவைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத கட்சிகளின் எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவாவில் நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 15 பேரில் 10 பேர் ஆளும் பாஜகவில் சேர்ந்தனர். இரு மாநிலங்களின் அரசியல் சூழலுக்கு பாஜகதான் காரணம் என்று காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், பாஜகவைக் கண்டித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே நேற்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஆனந்த் சர்மா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவுக்கு எதிராகவும் மத்தியஅரசுக்கு எதிராகவும் எம்.பி.க்கள் கோஷமிட்டனர். ‘ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’ என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்ட பதாகைகளை பிடித்தபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொண்டு பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close