[X] Close

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு; ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மத்தியஸ்தர் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 08:37 am
  • அ+ அ-

அயோத்தி விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தர் குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியஸ்தர் குழுவின் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் வரும் 25-ம் தேதி முதல் அயோத்தி வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மார்ச் 8-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுக தீர்வு காண, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய மத்தியஸ்தர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழு தனதுபரிந்துரைகளை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 15-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் அயோத்தி வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான கோபால் சிங் விஷாரத் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில், "மத்தியஸ்தர் குழுவின் சமரச பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே அயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்" என்று கோரினார்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

நாள்தோறும் விசாரிக்கப்படும்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியதாவது:

நீதிபதி கலிபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு ஒரு வாரத்துக்குள் அதாவது வரும் 18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கேற்ப வரும் 18-ம் தேதி புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும். மத்தியஸ்தர் குழுவின் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் வரும் ஜூலை 25-ம் தேதி முதல் அயோத்தி வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும்.

இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close