[X] Close

ஆட்சியை காக்கவும், கவிழ்க்கவும் 37 வருடங்களாக முக்கிய பங்கு வகிக்கும் நட்சத்திர விடுதிகள்: ஹரியாணாவில் தொடங்கிய கலாச்சாரம்


37

  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 07:54 am
  • அ+ அ-

-ஆர்.ஷபிமுன்னா

ஒரு மாநிலத்தில் ஆட்சியை காக்கவும், கவிழ்க்கவும் உதவுவதில் நட்சத்திர விடுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுமார் 37 வருடங்களுக்கு முன் ஹரியாணாவில் துவங்கிய இந்த விடுதி கலாச்சாரம் முடிவுக்கு வராமல் தொடர்கிறது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக 15-க்கும் மேற்பட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதில் 13 எம்எல்ஏ-க்கள் பாஜகவினரின் பாதுகாப்பில் மும்பையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிக்கு பின் பதவி ஏற்கும் இதுபோன்ற எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் செல்லும் இடங்களில் அதிக முக்கியத்துவமும், பெரும் மரியாதையும் அவர்கள் எதிர்பார்ப்பாகி விடுகிறது. இதுபோன்றவர்களுடன் கட்சி, ஆட்சி மற்றும் அரசுகளுக்கு சிக்கல் வரும் சமயங்களில் இந்த எம்எல்ஏக்களின் முக்கியத்துவம் மேலும் கூடி விடுவதும் வழக்கமாக உள்ளது. இப்படிப்பட்டவர்களை ஒரு இடத்தில் தங்க வைத்து காப்பது என்பது அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளுக்கும், அரசுகளுக்கும் பெரும் சவாலாகி விடுகிறது.

இதற்கு உதவியாக சமீப காலமாகப் பெருகி வருவது நட்சத்திர விடுதிகள் கலாச்சாரம். இவர்கள், தங்கள் விடுதியில் தங்கும் எம்எல்ஏக்கள் விரும்பும் அனைத்து விதமான வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர். இத்துடன் அனைவரையும் ஒவ்வொரு நிமிடமும் வெளியே தப்பிச் சென்று விடாமல் கண்காணித்து அவர்கள் சார்ந்த கட்சித் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்ந்து தகவல் அளிப்பதில் திறமை படைத்தவர்களாக இருக்கின்றனர். இதற்காக எம்எல்ஏக்கள் எவரும் மக்கள் நலனை சிந்திக்காதபடி எந்நேரமும் அவர்களை மகிழவைப்பதில் விடுதிகள் குறியாக உள்ளன. இந்த எம்எல்ஏக்களை எதிர்க்கட்சிகள் வேட்டையாடி விடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்வது விடுதிகளின் பொறுப்பாகி விடுகிறது. இதற்காக விடுதியின் காவலர்கள் தமது எம்எல்ஏ விருந்தினர்களிடம் காட்டும் கடுமை, புகாராகவும் வெளியாவது வழக்கமே.

எம்எல்ஏக்களை காக்கும் விடுதி கலாச்சாரம் முதன்முறையாக 1982-ல் ஹரியாணாவில் துவங்கியது. இம்மாநிலத்தின் அரசியல் கட்சியான இந்திய தேசிய லோக் தளத்தின் தலைவராக இருந்த தேவிலால், காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக இருந்தார். அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்த தேவிலால், ஆட்சி அமைக்க ஆளுநர் காங்கிரஸை அழைத்ததை எதிர்த்தார். தனது மெஜாரிட்டியை சபையில் நிரூபிக்க காங்கிரஸ் வேற்று கட்சியினரை இழுக்க முயல்வதாக புகார் இருந்தது. அந்தக் காலத்தில் கட்சித் தாவல் சட்டம் அமலாக்கப்படவில்லை. இதில் இருந்து தம் கூட்டணி எம்எல்ஏக்கள் 48 பேரை காக்க அனைவரையும் டெல்லியின் ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அனுப்பி தங்கவைத்தார் தேவிலால். இதையும் மீறி ஓட்டலின் குடிநீர் குழாயை பிடித்து இறங்கி ஒரு எம்எல்ஏ தப்பியதாகவும், அவரது ஆதரவினால் ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சி தப்பியதாகவும் கூறப்படுவது உண்டு.

இதன் தாக்கம் மறுவருடமே ஆந்திராவில் ஏற்பட்டது. இங்கு தெலுங்குதேசம் கட்சியின் தலைவராக இருந்த என்.டி.ராமராவ், தேவிலாலின் பாணியை கடைப்பிடித்தார். தொடர்ந்து பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் இதை கடைப்பிடித்தன. 2000-ம் ஆண்டில் பிஹாரில் ஆட்சி அமைத்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருக்கு மாற்றுக் கட்சியினர் ஆதரவு தேவைப்பட்டது. இதற்காக தங்கள் கட்சி எம்எல்ஏக்களை இழுக்காமல் இருக்க லாலுவும், காங்கிரஸும் அவர்களை பாட்னாவின் நட்சத்திர விடுதியில் தங்க வைத்து காத்தனர். இதனால் நிதிஷ் ஆட்சி ஒரு வாரத்தில் கவிழ்ந்தது. இதற்கும் முன்பாக உ.பி.யின் ஆளுநராக இருந்த ரொமேஷ் பண்டாரி 1998-ல் பாஜக முதல்வர் கல்யாண்சிங் ஆட்சியை நீக்கி காங்கிரஸை அமர்த்தினார். அப்போது தங்களது எம்எல்ஏக்களை விடுதியில் தங்க வைத்து காத்த பாஜக, தனது மெஜாரிட்டியை நிரூபிக்க கல்யாண்சிங் மீண்டும் முதல்வரானார். இந்தவகை விடுதி கலாச்சாரம் கடைசியாக தமிழகத்திலும் நடைபெற்றது. இங்கு அதிமுக தனது எம்எல்ஏக்களை விடுதியில் தங்க வைத்து தங்கள் ஆட்சியை காத்த வரலாறு உண்டு.

எனினும், இதற்காக விடுதிகளுக்கு அளிக்கப்படும் தொகை எவ்வளவு என்பதும், அதை அளிப்பவர்கள் யார் என்பதும் இதுவரை யாரும் அறியாத ரகசியமாகவே இருந்து வருகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close