[X] Close

தோல்விக்கு பிறகு முதன்முறையாக அமேதி சென்ற ராகுல் காந்தி: பேச முடியாமல் கதறி அழுத தொண்டர்கள்


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 15:02 pm
  • அ+ அ-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்குபின் இன்று முதன்முறையாக அமேதி தொகுதிக்கு சென்றார். அவரிடம் பேச முடியாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் அழுதனர்

கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. இத்தொகுதியில் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தவிர பெரும்பாலும் வேறு யாரும் போட்டியிட்டு வென்றதில்லை.

1980-ம் ஆண்டில் நடந்த தேர்தலில்  சஞ்சய் காந்தி வென்றார். அதன்பின் 1981 முதல் 1991-ம் ஆண்டுவரை ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி போட்டியிட்டு வென்றார்.

அவர் மறைவுக்குப் பின், அவர்களின் குடும்ப நண்பர் சதீஸ் சர்மா 1991 முதல் 1998-ம் ஆண்டுவரை போட்டியிட்டு வென்றார். அதன்பின் 1999-ம் ஆண்டு மட்டும் பாஜக வேட்பாளர் சஞ்சய் சிங் வென்றார். அவர் ஒரு வருடம் மட்டுமே பதவியில் இருந்தார்.

எனினும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரத்து 120 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். ராகுல் காந்திக்கு மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

raghul.JPG 

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு அமேதி தொகுதிக்கு இன்று முதல் முறையாக ராகுல் காந்தி சென்றார். இந்த பயணத்தின்போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், காங்கிரஸ்  வாக்குச்சாவடி பிரதிநிதிகள் உள்ளிட்டோரை முதல்கட்டமாக சந்தித்து பேசினார்.

தனது தோல்விக்கான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு அவர் நிர்வாகிளை சந்தித்து பேச விரும்பியதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் கலந்து கொண்ட சில நிர்வாகிகள் ராகுல் காந்தியிடம் பேச முடியாமல் அழுதனர். அவர்களை ராகுல் தேற்றினார்.

தொடர்ந்து அவர் சில கிராமங்களுக்கு செல்ல இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். காங்கிரஸ் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் அமேதியில் தோற்றபோதும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

raghul2.JPG 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close