[X] Close

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: தோனியை இழுக்க பாஜக முயற்சி


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 08:15 am
  • அ+ அ-

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை இழுக்க பாஜக தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது முதல்வர் ரகுவீர் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் வரும் டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை களமிறக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.

பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் தோனியை கட்சியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஒருவேளை அவர் தீவிர அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்றால் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய காய்கள் நகர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு அவர் பாஜகவில் இணையலாம் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியபோது, "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியை சேர்ந்தவர். பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டில் அவருக்கு அதிக செல்வாக்கு உள்ளது. அவரை கட்சியில் இணைப்பதற்காக அவருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வுபெற்ற பிறகு கட்சியில் இணையக்கூடும். எந்த தேதியில் அவர் இணைவார் என்பதை அவரே முடிவு செய்வார்" என்று தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close