[X] Close

மழைநீர் சேகரிப்பை கண்காணிக்க தனிப்பிரிவு: மாநகராட்சிகளுக்கு மத்திய அரசு உத்தரவு


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 08:13 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

‘‘மழைநீர் சேகரிப்பை தீவிரமாகக் கண்காணிப்பதற்கு தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். தங்கள் பகுதியில் ஒரு நீர்நிலையையாவது மீட்டெடுக்க வேண்டும்’’ என்று நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் நிலத்தடி நீர் கணிசமாக குறைந்துள்ளது. இதையடுத்து நீர்ப் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு திட்டங்களை ஊக்குவிக்க, 'ஜல் சக்தி அபியான்’ என்ற திட்டத்தை, கடந்த ஜூலை 1-ம் தேதி மத்திய அரசு தொடங்கி உள்ளது. இத்திட்டம் முதல் கட்டமாக செப்டம்பர் 15-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரையும் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஜல் சக்தி அபியான் முதல் கட்டத் திட்டத்தின் கீழ் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைஅமைச்சகம், ‘நகர்ப்புற நீர் சேமிப்பு’க்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளும், மழைநீர் சேகரிப்பை தீவிரமாகக் கண்காணிக்க, தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். இந்தப் பிரிவு நிலத்தடி நீர் எந்தளவுக்கு உறிஞ்சி எடுக்கப்படுகிறது, நிலத்தடி நீர் மட்டத்தின் நிலைகுறித்து தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

வருங்காலத்தில் மழைநீர் சேகரிப்பு வசதிகள் கட்டாயம் இருந்தால்தான், கட்டிடங்கள் கட்ட அனுமதி தரவேண்டும். கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றிதழை (ஓசிசி) வழங்க வேண்டும்.

நீர்நிலை புதுபிக்க வேண்டும்

மாநகராட்சிகள் தங்கள் பகுதிகளில் உள்ள ஒரு நீர்நிலையையாவது மீண்டும் புதுப்பித்து மழைநீரை சேகரிக்க வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக உயரும். அதற்காக மாநகராட்சி பகுதிக்குள் ஏதாவது ஒரு நீர்நிலையைத் தேர்ந்தெடுத்து, மக்களிடம் கலந்தாலோசித்த பின்னர் அதை புனரமைக்க வேண்டும்.

மேலும், நடைபாதைகளில் கான்கிரீட் போடுவது, பூங்காக்களில் நடக்கும் பகுதிகளை கான்கிரீட் போட்டுமூடுவதால் மழைநீர் வீணாக வழிந்தோடுகிறது. எனவே, அதுபோன்றபகுதிகளில் கான்கிரீட் போடுவதைத்தடுக்க வேண்டும். அத்துடன் நீர்நிலை பகுதிகள், பொது இடங்கள், பூங்காக்கள், சாலையோரங்களில் மரக்கன்றுகளை அதிகமாக நடுவதற்கு மாநகராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இத்தகவல்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகளை முக்கிய இடங்களில் வைக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close