[X] Close

முகிலன் கைது மர்ம பின்னணி


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 07:29 am
  • அ+ அ-

-என்.மகேஷ்குமார்

சமூக ஆர்வலர் முகிலன் 142 நாட்கள் தலைமறைவு வாழ்க்கைக்கு பின்னர், திருப்பதி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ரயில்வே போலீஸில் பிடிபட்டார். பயணிகள் அளித்த புகாரின் பேரில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்.15-ல் மதுரைக்கு செல்வதாக கூறி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சென்ற முகிலன் திடீரென காணாமல் போனார். இதனால் முகிலனை கண்டுபிடித்து தருமாறு உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் ஐநா சபை வரை சென்றதால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருப்பதி ரயில் நிலையத்தில் தாடியுடன் இருந்த ஒருவர் திடீரென தமிழில் கூடங்குளம் மின் நிலைய அமைப்பை எதிர்த்து கோஷமிட்டார். அவரை ரயில்வே போலீஸார் விசாரணைக்காக அழைத்து சென்றபோது, அந்த நபர் மேலும் அதிகமாக கோஷமிட்டார். ‘‘அணுமின் நிலையம் அமைக்காமல் தமிழர்களை காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள், கோலார் தங்க வயலில் அமைக்க மறுத்த அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்தில் அமைப்பது நியாயமா?, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் தமிழர்கள் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த அணில் அகர்வாலை கைது செய், 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள அப்பாவி 7 தமிழர்களை விடுதலை செய்" என்று அவர் முழக்கமிட்டார்.

இவரை போலீஸார் விசாரித்து கொண்டிருந்தபோது, இவரது குரல் கேட்டு மன்னார்குடி ரயிலில் இருந்த இவரது நண்பர் ஷண்முகம் என்பவர் இவரை அடையாளம் கண்டு, முகிலனின் மனைவிக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி அவர் வழக்கறிஞர் மூலம் இரவோடு இரவாக சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சிபிசிஐடி போலீஸார் திருப்பதி ரயில்வே போலீஸாருக்கு முகிலனின் பழைய புகைப்படத்தை அனுப்பி, ‘இவரை நீங்கள் சமீபத்தில் ரயில் நிலையத்தில் கைது செய்தீர்களா? என கேட்டனர்.

ரயில்வே போலீஸார் குழப்பம்

அந்த புகைப்படத்தில் இருப்பவர்போல் இல்லாமல் தாடி வைத்திருந்ததால் ரயில்வே போலீஸார் சற்று குழப்பம் அடைந்தனர். அதன் பின்னர் அங்க அடையாளங்களை சரி பார்த்து அவர் முகிலன்தான் என்பதை உறுதி செய்தனர். பின்னர், அவரை காட்பாடியில் ஒப்படைக்கும்படி சிபிசிஐடி போலீஸார் ஆந்திர போலீஸாரை கேட்டுக்கொண்டனர். அதன்படி, முகிலன் காட்பாடியில் தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தற்கொலைக்கு முயன்றார்

இதுகுறித்து திருப்பதி ரயில்வே போலீஸார் கூறியதாவது: மன்னார்குடி ரயில் அருகே ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் வெள்ளை சட்டை அணிந்து, தாடியுடன், சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர், தமிழில் மத்திய, மாநில அரசுகளை திட்டியபடி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார். இவரை பார்த்து பயந்துபோன சில பயணிகள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், நாங்கள் அங்கு சென்று பார்த்தோம்.

எங்களை கண்டதும் அந்த நபர், அப்போதுதான் ராஜமுந்திரியில் இருந்து வந்த ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய முயன்றார். உடனடியாக நாங்கள் அவரை காப்பாற்றி, விசாரணை நடத்த ரயில்வே நிலையத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றோம். பயணிகள், இவர் மீது கொடுத்த அச்சுறுத்தல் மற்றும் தற்கொலை முயற்சி புகார்களின் அடிப்படையில், இவர் மீது வழக்கு பதிவு செய்தோம்.

பின்னர் நடத்திய விசாரணையில், அவர் தனது ஊர் ‘காட்பாடி’ என கூறினார். இதனை தொடர்ந்து நாங்கள் அவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோதே, சிபிசிஐடி போலீஸாரிடம் இருந்து போன் வந்தது. அவர் பெயர் முகிலன் என்றும், அவர் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அவரை காட்பாடியில் ஒப்படைக்கும்படியும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாங்கள் அவரை காட்பாடி போலீஸில் ஒப்படைத்தோம் என்று திருப்பதி ரயில்வே போலீஸார் கூறினர்.

முகிலன் உண்மையாகவே தற்கொலைக்கு முயன்றாரா? அவர் மன்னார்குடி ரயில் மூலம் திருப்பதி வந்தாரா? இத்தனை நாட்கள் அவர் தலைமறைவாக எங்கிருந்தார்? அவர் மீது பெண் ஒருவர் அளித்துள்ள பாலியல் புகாரால் முகிலன் தலைமறைவானாரா அல்லது போலீஸுக்கு பயந்து தலைமறைவாக இருந்தாரா? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன. இவற்றுக்கு முகிலன் மட்டுமே பதில் அளிக்க முடியும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close