[X] Close

காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சேர்ந்த 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையில் தஞ்சம்: நாளை பேரவைத் தலைவரை சந்திக்க திட்டம்


10

  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 07:24 am
  • அ+ அ-

-இரா.வினோத்

கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சேர்ந்த 10 அதிருப்தி எம்எல்ஏக்கள், பாஜகவினர் மேற்பார்வையில் மும்பையில் உள்ள தனியார் விடுதியில் த‌ங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நாளை பெங்களூரு வந்து சட்டப்பேரவைத் தலைவர், ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களும், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்தனர். சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் அலுவலகத்தில் இல்லாததால், ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து தங்களது முடிவை தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், மஜத தலைவர்கள் ஆட்சியை காப்பாற்றும் வகையில் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவரும், 7 முறை எம்எல்ஏவாக வெற்றிப்பெற்ற ராமலிங்க ரெட்டி, மஜத முன்னாள் மாநில தலைவர் விஷ்வநாத் தங்களது முடிவை மாற்ற முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

தனி விமானத்தில் பயணம்

இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் பெங்களூரு பழைய விமான நிலையத்தில் பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகருக்கு சொந்தமான ஜூபிடர் கேபிடல் நிறுவன விமானம் மூலம் மும்பை சென்றனர். அவர்களுடன் பாஜக எம்எல்ஏ அஷ்வத் நாராயாணா, பாஜக எம்எல்சி பிரசாத் லாட் ஆகியோரும் சென்றனர்.

காங்கிரஸ், மஜத‌வைச் சேர்ந்த 10 அதிருப்தி எம்எல்ஏக்களும் மும்பையில் உள்ள சோபிடெல் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜக எம்எல்சி பிரசாத் லாட், மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு நெருக்கமானவர் என்பதால், அவர் மூலம் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோபிடெல் சொகுசு விடுதிக்குள் வெளி ஆட்கள் நுழைவதும், அதிருப்தி காங்கிரஸ், மஜத‌ எம்எல்ஏக்களிடம் பேசுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து தகவலறிந்த மகாராஷ்ட்ர காங்கிரஸார் அம்மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுராஜ் சிங் தாகூர் தலைமையில் நேற்று மாலை முற்றுகை போராட்டம் நடத்தினர். அங்கு வந்த போலீஸார், காங்கிரஸாரை அப்புறப்படுத்தி கைது செய்தனர். 10 அதிருப்தி எம்எல்ஏக்களும் செவ்வாய்க்கிழமை பெங்களூரு திரும்பி பேரவைத் தலைவர் ரமேஷ்குமார், ஆளுநர் வாஜுபாய் வாலா ஆகியோரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எடியூரப்பா தயார்

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடத்த தேவையில்லை. தேர்தலுக்காக செலவிடும் தொகை, கர்நாடக மக்களுக்குதான் சுமையாக இருக்கும். எனவே தனிப்பெரும் கட்சியாக இருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். அவ்வாறு அழைத்தால் ஆட்சி அமைக்க தயாராக இருக்கிறேன்.

காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களின் ராஜினாமாவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இந்த பிரச்சினைக்கு சித்தராமையாவும் அவரது ஆதரவாளர்களும்தான் காரணம். குமாரசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன.இன்னும் 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close