[X] Close

ஒரு லட்சம் ஏழை பெண்களுக்கு அரசு செலவில் திருமணம்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நடத்தி வைக்கிறார்


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 08:56 am
  • அ+ அ-

உத்தரபிரதேசத்தில் ஒரு லட்சம் ஏழை பெண்களுக்கு அரசு செலவில் திருமணம் நடத்தி வைக்கிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். அடுத்த ஆண்டு மார்ச் முதல் மூன்று தேதிகளில் இத்திருமணங்கள் நடைபெற உள்ளன.

பாஜக ஆளும் உ.பி.யில் ஏழை பெண்களுக்கு அரசு செலவில் திருமணத் திட்டம் கடந்த ஆண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில், மணமாகும் பெண்களுக்கு அரசு உதவித்தொகையாக ரூ.35,000 அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு உ.பி. அரசு திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் திருமணத் திட்டத்துக்கான அரசு உதவித்தொகை ரூ.51,000 என உயர்த்தி அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உ.பி. மாநில சமூகநலத்துறை செய்து வருகிறது.

இது குறித்து உ.பி. சமூகநலத்துறை அமைச்சர் ரமாபதி திரிபாதி கூறும்போது, “இந்த திட்டத்துக்கு ஏழை மக்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் வரும் ஆண்டு முதல் திருமண ஜோடிகளின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளோம். இதன்மூலம், எங்கள் அரசு இரண்டு லட்சம் குடும்பங்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

ஒரே சமயத்தில் நடைபெறும்

கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி பத்தாயிரம் ஏழை பெண்களுக்கு அரசு செலவில் மணமுடிக்க திட்டமிடப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பில் அதன் எண்ணிக்கை 15,000 என உயர்ந்துள்ளது. உ.பி. மாநிலம் முழுவதிலும் ஒரே சமயத்தில் நடைபெறும் இத்திருமண நிகழ்ச்சியில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்கின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close