[X] Close

பெங்களூருவில் கைதான வங்கதேச தீவிரவாதியை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து என்ஐஏ குழு விசாரணை


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 07:35 am
  • அ+ அ-

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள தொட்டபல்லாபூர் பகுதியில் கடந்த மாதம் 25-ம் தேதி ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி) என்ற தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் (28) என்பவரை, தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பெங்களூரு ராம் நகர் அடுத்த திப்பு நகரில் உள்ள கால்வாயில் இருந்து வெடிக்காத 2 வெடிகுண்டுகளை, கடந்த 26-ம் தேதி போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் தீவிரவாதி ஹபீப் உர் ரஹ்மான் ஷேக்கை என்ஐஏ அதிகாரிகள், கர்நாடக மாநில தனிப்பிரிவு போலீஸார் உதவியுடன் நேற்று கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தனர். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மலை மீது ஹபீப் உர் ரஹ்மான் ஷேக்கை அழைத்துச் சென்று சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் மீண்டும் பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி எஸ்பி பண்டி கங்காதர் கூறும்போது, ‘‘ஹபீப் உர் ரஹ்மான் ஷேக்கிடம், என்ஐஏ குழுவினர் நடத்திய விசாரணையில், கடந்த 2012-ம் ஆண்டு கிருஷ்ணகிரி நகரில் உள்ள மலையில் வெடிகுண்டு சோதனை நடத்தியதாக தெரிவித்துள்ளார். அதனால்தான் என்ஐஏ குழுவினர்நேரடியாக வந்து மலையில் விசாரணை நடத்தினர். ஆனால் அங்கு எவ்வித தடயமோ, வெடிபொருட்களோ கிடைக்கவில்லை’’ என்றார்.

மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கில், ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதற்கான குற்றப்பத்திரிகையில், இந்திய அரசு மற்றும் வங்கதேச அரசுகளுக்கு எதிராக போர் தொடுக்க, ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் என்ற அமைப்பு சதி செய்து வருவதாகவும், அதில் ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் முக்கிய உறுப்பினர் எனவும் கூறப்பட்டுள்ளது. தீவிரவாதி ஹபீப் உர் ரஹ்மான் ஷேக், ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் அமைப்பின் தலைவர் ஜாஹித் உல் இஸ்லாம் என்ற கவுசரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் போலீஸாரின் கெடுபிடி அதிகரித்ததால், பெங்களூரு அருகே உள்ள தொட்டபல்லாப்பூர் பகுதியில் பதுங்கியிருந்த ஹபீப் உர் ரஹ்மான் ஷேக், கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டு, பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரை கொல்கத்தாவுக்கு தேசிய புலனாய்வு அமைப்பினர் அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close