[X] Close

இப்படிக் கேட்டால் வரதட்சனைகூட நல்லதுதான்!


in-rural-odisha-a-groom-demands-a-growing-dowry

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 Jun, 2018 09:46 am
  • அ+ அ-

வரதட்சனை பெறுவதும் கொடுப்பதும் சட்டப்படி தண்டனைக்குரியதுதான். ஆனால் ஒடிசா மாநில ஆசிரியர் ஒருவர் தனது திருமணத்துக்கு கேட்ட வரதட்சனையைப் போல் எல்லோரும் கேட்டால் அது பாராட்டுக்குரியதே.

ஒடிசா மாநிலம் கேந்தரப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரோஜ் கன்ட் பிஸ்வால் (33). அவருக்கு வீட்டில் பெண் தேடும் படலம் ஆரம்பித்தபோது அவர் போட்ட ஒரே நிபந்தனை திருமணத்துக்கு மணப்பெண் வீட்டார் 1000 மரக்கன்றுகள் வாங்கித்தர வேண்டும் என்பது மட்டுமே. இந்த நிபந்தனை பிஸ்வாலின் பெற்றோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இவரது இந்த விருப்பத்துக்கு சொந்த வீட்டிலேயே எதிர்ப்பு இருந்தது. ஆனால், பிஸ்வால் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். சிறுவயதிலிருந்தே மரம் நம் நண்பர் என்ற பிரச்சாரக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டிவருகிறார். அதனாலே தனது திருமணத்துக்கு 1000 மரக்கன்றுகளை வரதட்சனையாகக் கேட்டிருக்கிறார்.
அவரது விருப்பத்துக்கேற்ப மணப் பெண்ணும் கிடைத்திருக்கிறார். பக்கத்து ஊரைச் சேர்ந்த ராஷ்மிரேகா என்ற பெண்ணுடன் பிஸ்வாலுக்கு திருமணம் நிச்சயமானது. பெண் வீட்டார் பிஸ்வால் கேட்ட வரதட்சனைக்கு ஒப்புக் கொண்டனர். 
ஜூன் 22-ம் தேதி  சரோஜ் கன்ட் பிஸ்வால் - ராஷ்மிரேகா திருமணம் இனிதே நிறைவேறியது. திருமணத்துக்கு மணப்பெண்ணை அழைத்துவந்த பெண் வீட்டார் ஒரு வேன் நிறைய மரக்கன்றுகளைக் கொண்டுவந்தனர். அந்த மரக்கன்றுகளை பிஸ்வால் திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு பரிசாக வழங்கினார்.

தனது முயற்சி குறித்து பிஸ்வால் கூறும்போது, "நான் வரதட்சனைக்கு எதிரானவன். அதை எந்த ரூபத்திலும் ஊக்குவிப்பதில்லை. ஆனால், நான் மணப்பெண் வீட்டாரிடம் 1000 மரக்கன்றுகள் வாங்கியிருப்பது மரம் வளர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கே. அதனாலேயே திருமணத்துக்கு வரதட்சனையாக மரக்கன்றுகளை வாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறேன். வித்தியாசமான இந்த விழிப்புணர்வால் பயனிருக்கிறது.

நானும் எனது மனைவியும் பள்ளி ஆசிரியர்களாக இருப்பதால் எங்களின் இந்த முயற்சி மாணவர்களை ஊக்குவிக்கும். இதேபோல் என் கிராமத்தில் உள்ள மற்றவர்களும் வித்தியாசமான முறையில் மரம் வளர்ப்பு குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close