[X] Close

உங்கள் ஏசி-யை 24 டிகிரி செல்சியஸில் இயக்குங்கள்: மின்துறை அட்வைஸ்


keep-your-air-conditioner-temperature-at-24-degree-celcius

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Jun, 2018 15:40 pm
  • அ+ அ-

ஏசியின் உள்ளமைவு (டீஃபால்ட் செட்டிங்) குளிர்நிலையை 24 டிகிரி செல்சியஸ் என்று வடிவமைக்க மத்திய மின் துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மின் துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங், "ஏசியின் உள்ளமைவு குளிர்நிலையை 24 டிகிரி செல்சியஸ் என்று வடிவமைக்க அரசு பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் வீடு, அலுவலகங்களில் ஏசி பயன்படுத்தப்படும்போது அதன் உள்ளவமைவு குளிர்நிலையை 24 டிகிரி செல்சியஸ் என்றளவிலேயே பயன்படுத்துவதை கட்டாயமாக்க திட்டமிடப்படுகிறது.

மின்சார நுகர்வு சேமிப்பு மற்றும் பொது சுகாதார அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. ஏசி தயாரிப்பாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் ஏசி மெஷின்களில் கட்டாயக் குளிர்நிலை 24 டிகிரி செல்சியஸ் என்பதை குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படும். ஒருவேளை இந்த முடிவுக்கு ஒப்புதல் கிடைத்தால் அடுத்த சில மாதங்களிலேயே இது அமலுக்கு வரும்" என்று கூறியுள்ளார்.

ஏன் இந்த முடிவு?
"ஏசி மெஷின்களில் வெப்பநிலையை அதிகரிக்கும்போது மின்சார பயன்பாடு குறையும். ஒரு டிகிரி ஏசி வெப்பநிலையைக் கூட்டினால் (அதாவது 18 டிகிரி என்ற நிலையில் இருந்து 19 டிகிரி என்றளவுக்கு கூட்டினால்) 6% மின்சாரம் சேமிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் அதிகமான குளிரில் இருப்பது அசவுகரியமானது மட்டுமல்ல சுகாதாரமற்றதும்கூட.

மனித உடலின் சராசரி வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் ஆனால் பெரிய வணிக நிறுவனங்கள் 18 முதல் 21 டிகிரி குளிர்நிலையில் ஏசி மெஷின்களை இயக்குகின்றன. இதனால் உடல்நலன் பாதிக்கப்படுகிறது. அதிகமான குளிர்நிலையில் ஏசி-யை இயக்கிவிட்டு உடல் வெப்பத்தைப் பேண போர்வைகளும் ஸ்வெட்டர்களும் பயன்படுத்துவதால் மின்சாரம் தான் வீணாகிறது" என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் ஏசியின் குளிர்நிலையை சீராக 24 டிகிரி செல்சியஸ் என்றளவில் வைப்பதால் சுற்றுச்சூழலையும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

இந்த திட்டத்தால் மின்சாரம் மிச்சமாவது எப்படி?
பியோரோ ஆஃப் எனர்ஜி எஃபிசியன்ஸியின் கூற்றின்படி இந்தியாவில் 6% வீடுகளில் மட்டுமே ஏசி இருக்கிறது. ஏசி பயன்பாட்டாளர்கள் அனைவருமே டீஃபால்ட் செட்டிங்கில் குளிர்நிலையை 24 டிகிரி செல்சியஸ் என்றளவில் பயன்படுத்தினால் இந்திய தேசத்தில் 20 பில்லியன் யூனிட் மின்சாரம் சேமிக்கப்படும்.

ஜப்பானில் ஏற்கெனவே இத்தகைய ஏசி டீஃபால்ட் செட்டிங் குளிர்நிலை அமலில் இருக்கிறது. அங்கு எல்லா ஏசி மெஷின்களிலும் உள்ளமைவு குளிர்நிலை 28 டிகிரி செல்சியஸ் என்றளவிலேயே இருக்கும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close